எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, June 16, 2017

சிகரி போட்ட கட்சி அங்கே! சிகரி போடாத கட்சி இங்கே! :)

ஹிஹிஹி, நாங்க சிகரி போட்ட காஃபியே சாப்பிடறதில்லை! சுத்தமான காஃபி தான்! நீங்க சொல்லும் அதே கடுக்காய் டேஸ்டில் தான்! நிறமெல்லாம் சந்தன நிறமா இருக்கும்! அதுவும் நல்ல பசும்பால் என்றால் எங்க வீட்டுக் காஃபியை அடிச்சுக்க முடியாது!

(என்னோட கண்ணே பட்டுதோ என்னமோ இப்போப் பால் பாக்கெட் தான் வாங்கறோம்! காஃபி சுமார் ரகம் தான்)

Coffee Day? மாசத்துக்கு நூறு கிராம்காஃபி பவுடர் போதும்! :) வெந்நீர் விட விடத் திக்காக இறங்கிட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே இருக்கும்! :)

பீபரி, ஏ காஃபியோடு சேர்த்து டிகாக்‌ஷன் திக்காக இறங்க ரொபஸ்டா சேர்க்கலாம். நாங்க கொட்டை வாங்கி அரைக்கிறச்சே இப்படித் தான் போட்டிருக்கோம். இப்போ பீபரி 70%+30% ஏ காஃபி!  (முன்னெல்லாம் உருண்டைக் கொட்டை, தட்டைக் கொட்டை என்பார்கள். இப்போ உருண்டைக் கொட்டையே வரதில்லைனு நினைக்கிறேன். அதோடு இல்லாமல் ரேஷன் கார்டிற்குக் காஃபிக் கொட்டை கொடுத்துட்டு இருந்தாங்க! அப்புறமா அதுவும் நின்னு போச்சு!

மும்பை, டெல்லியிலும் பார்த்துட்டேன். :) சென்னையிலும்! :) இங்கே ஶ்ரீரங்கத்தில் பத்மா காஃபி ரொம்ப உயர்வாச் சொல்வாங்க. அங்கேயும் வாங்கிப் பார்த்தோம். கொட்டையை அதிகமா வறுக்கிறாங்க! எங்களுக்கு வறுத்து அரைத்தே சாப்பிட்டு வழக்கம் என்பதாலோ என்னமோ கொஞ்சம் அதிகமா வறுபட்டாலும் தீய்ந்த வாசனை வராப்போல் ஓர் எண்ணம்! ஆகையால் இங்கே வேறொரு கடையில் எங்களுக்கு நேரே வறுத்து அரைத்துத் தருவாங்க! :)

கும்பகோணத்தில் எந்தத் தெரு? அடிக்கடி போவோம். மோகன் காஃபி? முயற்சி செய்யறோம்

(மடத்து தெரு. காவேரி பழைய பாலக்கரைக்கு அருகில். வெளி நாட்டுக்கெல்லாம் அனுப்புகிறார்கள்.) நண்பர் குறிப்பிட்டது!

 நீங்க சொல்வது சரியே! காஃபி கொட்டையைப் பொறுத்தே காஃபியின் சுவை! யு.எஸ்ஸில் கொலம்பியன் காஃபி!


காஃபி க்கான பட முடிவு


முகநூலில் நேத்திக்கு (?) கே.ஜி.ஜவர்லால் காஃபிக்குச் சிகரி போட்டே ஆகவேண்டும் என்று சொல்லி இருந்தார். அதுக்கு எழுதின கருத்துரைகள் மேலே! காஃபி பத்தி நிறையப் பதிவு எழுதிட்டேன்! ஆகையால் மேற்கொண்டு சொல்லாமல் சும்மாக் கருத்தை மட்டும் பதிஞ்சிருக்கேன். அதிலும் நான் சொன்னவை மட்டுமே!  என் ஓட்டு சிகரி கலக்காத காஃபிக்கே!


காஃபி  இங்கே காஃபி பற்றி எழுதிய ஓர் பதிவு!

தொடர்ச்சி

ஒரு வாய்க் காஃபி  காஃபி பத்தி 2006 ஆம் வருஷம் எழுதினது! 

Wednesday, June 14, 2017

ப்ளாஸ்டிக்கில் அரிசி! ஓர் உண்மை!

டூப். டூப் டூப் பிளாஸ்டிக் சேர், பிளாஸ்டிக் தட்டு என்றெல்லாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். அதென்ன பிளாஸ்டிக் அரிசி?
நல்ல பாம்புக்கும் ‘நல்லது’க்கும் எப்படி சம்பந்தம் கிடையாதோ... பிளாஸ்டிக் சர்ஜரிக்கும் பிளாஸ்டிக்கும் எப்படி தொடர்பு கிடையாதோ... அதுபோல்தான் பிளாஸ்டிக் அரிசிக்கும் பிளாஸ்டிக்குக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. பிளாஸ்டிக் அரிசி என்பது பிளாஸ்டிக்கில் செய்யப்படுவது இல்லை.
அப்படி என்றால் பிளாஸ்டிக் அரிசி என்பது என்ன?
அரிசி அரவை ஆலைகளில் நெல்லை அரைத்து அரிசி எடுக்கும் போது, குறிப்பிட்ட அளவிலான அரிசி நொறுங்கி குருணையாக மாறும். கிராமப்புறங்களில் இந்த குருணையை கோழிகளுக்கு தீவனமாக போடுவார்கள்.
ஆனால் எந்த புண்ணியவானோ, இந்த குருணையை ஏன் கோழிகளுக்கு வீணாக தீவனமாக போடவேண்டும் என்று யோசித்து இருக்கவேண்டும். அதன் விளைவாக உருவானதுதான் இந்த பிளாஸ்டிக் அரிசி.
குருணை அரிசியுடன் உருளைக்கிழங்கு, சீனி கிழங்கு என அழைக்கப்படும் சக்கரவள்ளி கிழங்கு, ரசாயனம் (போரிக் ஆசிட்), தண்ணீர் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து எந்திரத்தில் போட்டு அரைக்கிறார்கள். நன்றாக அரைக்கப்பட்டு கூழ் வடிவத்துக்கு வந்ததும் அதை ஊற்றி உலர வைத்து கிட்டத்தட்ட காகிதம் போல் மாற்றுகிறார்கள். அந்த காகித தகடு நன்றாக உலர்ந்ததும், அதை எந்திரத்தில் கொடுத்து அரிசி போல் சிறு சிறு துண்டுகளாக நொறுக்குகிறார்கள். அப்படி நொறுக்கப்படும் துண்டுகள் பார்ப்பதற்கு உண்மையான அரிசி போலவே இருக்கும். ஒரிஜினல் அரிசிக்கும் இந்த போலி அரிசிக்கும் உள்ள வித்தியாசத்தை யாராலும் அவ்வளவு எளிதில் கண்டுபிடித்துவிட முடியாது.
எப்படி மரவள்ளி கிழங்கில் இருந்து சவ்வரிசி தயாரிக்கப்படுகிறதோ, அதுபோல்தான் இந்த பிளாஸ்டிக் அரிசியும் தயாரிக்கப்படுகிறது. மற்றபடி பிளாஸ்டிக்குக்கும் இந்த அரிசிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.
இப்படி பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கும் முறை பற்றிய வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை உண்டுபண்ணியது. அதைத்தான் பிளாஸ்டிக் அரிசி... பிளாஸ்டிக் அரிசி... என்று சொல்லி பீதியை ஏற்படுத்தி விட்டார்கள்.
தெலுங்கானா மாநிலத்தில் பல இடங்களில் கடைகளில் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுவதாகவும் தகவல் பரவியது. இதைத்தொடர்ந்து அங்குள்ள அரிசி அரவை ஆலை அதிபர்கள் சங்கத்தினர், குருணை அரிசியை பயன்படுத்தி மேற்கண்ட முறையில் அரிசி தயாரிப்பதைத்தான் பிளாஸ்டிக் அரிசி என்கிறார்கள் என்றும், மற்றபடி பிளாஸ்டிக் அரிசி என்ற ஒன்று கிடையவே கிடையாது என்றும் விளக்கம் அளித்தனர்.
பிளாஸ்டிக்கில் பாட்டில், விளையாட்டு சாதனங்கள் போன்ற பல பொருட்களை தயாரிக்கலாம். ஆனால் அரிசி தயாரிப்பது என்பது நெல் விளைவிப்பதை விட அதிக செலவு ஆகும். எனவே யாரும் அந்த விபரீத காரியத்தில் இறங்கி கையை சுட்டுக்கொள்ள மாட்டார்கள் என்பது நிபுணர்கள் கருத்து.
மேலும் பிளாஸ்டிக்கில் அரிசி தயாரிக்கப்பட்டால் அதை வேகவைக்கவும் முடியாது, சாப்பிடவும் முடியாது. வாயில் வைக்கும் போதே தெரிந்துவிடும்.
எனவே குருணை, உருளைக்கிழங்கு மாவு, போரிக் ஆசிட் ஆகியவற்றை சேர்த்து தயாரிக்கப்பட்ட அரிசியைத்தான் பிளாஸ்டிக் அரிசி என்று கூறி மக்களிடம் பீதியை ஏற்படுத்திவிட்டார்கள். பிளாஸ்டிக் அரிசி பார்ப்பதற்கு உண்மையான அரிசியைப் போன்றே இருந்தாலும், போலி அரிசி உடலுக்கு நல்லது அல்ல. சமைக்கும் போதே அதன் யோக்கியதை தெரிந்துவிடும்.
தமிழகத்திலும் இந்த பிளாஸ்டிக் அரிசி விவகாரம் தலைதூக்கி மக்களிடம் பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சில இடங்களில் கடைகளில் விற்கப்படும் அரிசியை உணவுத்துறை அதிகாரிகள் சோதனை செய்து பார்த்து இருக்கிறார்கள்.
தமிழகத்தில் அசல் அரிசியே நன்றாக இருக்கும் போது பிளாஸ்டிக் அரிசி நுழைவதற்கு வாய்ப்பு இல்லை என்றும், எங்காவது பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுவதாக புகார் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.
இந்த பிளாஸ்டிக் அரிசி விவகாரம் தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் ஏற்கனவே பொதுநல வழக்கு ஒன்றும் தொடரப்பட்டு இருக்கிறது.

நன்றி Ayyavaiyer Gopu

நேற்று முகநூலில் அய்யாவையர் கோபு என்னும் பெரியவர் மேற்கண்ட பகிர்வைப் பகிர்ந்திருந்தார். உண்மை நிலவரம் அனைவரும் அறியும் பொருட்டு இதை இங்கேயும் பகிர்ந்திருக்கிறேன். உண்மையில் ப்ளாஸ்டிக் அரிசி  என நாம் நினைக்கும் ப்ளாஸ்டிக்கைச் சமைத்தால் சூடு தாங்காமல் உருகி விடும். அதே போல் தொலைக்காட்சிகளிலும் ஒரு சில ஊடகங்களிலும் முகநூல் வாட்சப் குழுமங்களிலும் ப்ளாஸ்டிக் கிண்ணங்களில் இட்லி வார்ப்பதாகவும் கூறுகின்றனர். அதுவும் இயலாத ஒன்றே என நினைக்கிறேன். ப்ளாஸ்டிக் கிண்ணங்களை அடுப்பில் வைத்துச் சூடு செய்தால் உருகும் தன்மை கொண்டது!  அப்புறமா இட்லி எப்படிச் செய்ய முடியும்? பாலிதீன் கவர்களில் செய்வதாகவும் துணிக்குப் பதிலாக அதைப் போடுவதாகவும் சொல்கின்றனர்.

பாலிதீன் கவர்கள் அவ்வளவு தரமானதாக இருப்பதில்லை. தரமான பாலிதீன் பைகளிலேயே (ஜிப்லாக் பைகள்) ஒரு முறை  வாழை இலை இல்லாமல் ஜிப்லாக் பையில் வைத்து  போளி தட்டிவிட்டு ஞாபகக் குறைவாகப் பையை நீக்காமலேயே தோசைக்கல்லில் போட்டு விட்டேன். உடனடியாக கவனம் வந்து அதை எடுக்க முற்பட்டபோது தோசைக்கல்லில் ஒட்டிக் கொண்டு வரவே இல்லை!  சூட்டில் ஒட்டுக் கொண்டு விட்டது. சூட்டை அதிகரித்து அதைச் சுரண்டித் தான் எடுத்தேன். ஆகவே ப்ளாஸ்டிக் கிண்ணங்களிலோ அல்லது பாலிதீன் கவர்களிலோ இட்லி வார்ப்பது என்பது நம்பவும் முடியவில்லை. நேரில் பார்த்தால் தான் புரியும். தரமான பைகளே சூட்டில் ஒட்டிக் கொள்கின்றன.  இட்லிக்கடைகள் நடத்துபவர்கள் தரமான பாலிதீன் கவர்களுக்கு என்ன செய்வார்கள்? கிடைப்பதைத் தானே பயன்படுத்த முடியும்? அவை உருகாமல் இருக்குமா?

ஹோட்டல்களில் சுடச் சுட சாம்பார், காய்கள் கொடுத்தாலே அந்தப் ப்ளாஸ்டிக் பைகள் சூடு தாங்காமல் சுருங்கி விடுகின்றன. சில சமயம் பைகளில் துவாரம் விழுகின்றது. கூடியவரை பாத்திரம் எடுத்துச் செல்வதே நல்லது. ஆகவே ப்ளாஸ்டிக்கில் சமைக்கலாம் என்பதை உடனே நம்பி விடாமல் யோசித்து நேரில் கண்டறிந்து கொண்டு நம்புங்கள்! கூடியவரை ப்ளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்கவும். 

Tuesday, June 13, 2017

வீடு!இல்லம்! இனிய இல்லம்! :(

"கல்யாணம் பண்ணிப்பார்! வீட்டைக் கட்டிப்பார்!" அப்படினு சொல்வாங்க. நாங்க கல்யாணமும் பண்ணிப் பார்த்தோம். வீட்டையும் கட்டிப் பார்த்தோம். அதுவும் அம்பத்தூரில் உள்ள எங்கள் வீட்டைக் கட்டுவதற்கு நாங்க பட்ட பாடு! முதல்லே இடம் வாங்க அலைச்சல்! முதலில் ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து வாங்க எல்லா ஏற்பாடுகளும் பண்ணிவிட்டுக் கடைசியில் அந்த இடத்தை வாங்கினால் அது அரசால் அங்கீகரிக்கப்பட்ட மனைகள் பட்டியலில் இல்லை என்பதால் அரசுக் கடன் வாங்கிக் கட்ட முடியாது என்று சொல்லிவிட்டார்கள். மீண்டும் நிலம் தேடும் படலம் தொடங்கிக் கடைசியில் இப்போ வீடு கட்டி இருக்கும் இடம் தேர்வு செய்தார் நம்ம ரங்க்ஸ். அவர் எல்லாம் முடிவு பண்ணிட்டுக் கூட்டிப் போய்க் காட்டினார்.  எனக்கு அப்போல்லாம் இந்த விஷயத்தில் சுத்தமாக எதுவும் தெரியாது. ஆனாலும் உள் மனம் என்னமோ அம்பத்தூர் வேண்டாம் என்றே இடைவிடாமல் புலம்பல்! வேறே எங்கே வாங்குவது? நீ தேடிப் போய்க் கண்டுபிடி! மதுரையிலே எல்லாம் வாங்க முடியாதுனு ரங்க்ஸின் நக்கல்! ஆகவே இடத்தைப் பார்த்ததும் ஒண்ணுமே புரியாட்டியும் தலையைப் பெரிசா ஆட்டியாச்சு!  அதை நன்றாக ஆராய்ந்து 1980 செப்டெம்பரில் அதைப் பதிவும் செய்தார் ரங்க்ஸ். அன்னிக்கு வீட்டில் அல்வாக் கிளறி உறவினருக்கு விநியோகித்தது இன்னமும் நினைவில் இருக்கு.

78 ஆம் வருடம் தான் நாத்தனார் கல்யாணம் முடிந்திருந்ததால் அந்தக் கடனே இருந்தது என்பதால் உடனடியாக வீடு கட்டும் வேலையை ஆரம்பிக்க முடியலை. எங்களிடம் இருந்த லூனா வண்டியை விற்கும்படி ஆயிற்று. அந்த வண்டியை விற்றுவிட்டுக் கொஞ்சம் பணம் போட்டுக் கிணறு மட்டும் எடுத்தோம். 30 அடிக்குள்ளாகத் தண்ணீர் வந்து தண்ணீரும் சுவையாக இருந்தது என்னமோ உண்மை! பூமி பூஜையை மட்டும் போட்டோம். அதுக்குள்ளே அடுத்தடுத்துப் பிரச்னைகள். எனக்கு மூலம் அறுவை சிகிச்சை! மைத்துனரின் திருமணம் என்று தொடர்ச்சியான நிகழ்வுகள். மைத்துனரின் திருமணத்தை ஒட்டிப் பெரிய வீடு வேண்டும் என்று தேடியதில் இப்போ வீடு கட்டி இருக்கும் தெருவிலேயே காலியாக இருந்த ஒரு வீட்டுக்குக் குடித்தனம் போனோம். பின்னால் வீடுகட்டும்போது கிட்ட இருக்கணும் என்னும் காரணமும் சேர்ந்து தான்! அங்கே போயும் முதல் இரண்டு வருடங்கள் வீடு கட்ட எந்த முயற்சியும் செய்ய முடியலை! அரசு வீடு கட்டும் கடன்கொடுக்கும் வசதியைத் தாற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்ததே காரணம்! அதுக்குள்ளே வீட்டிற்கான திட்டங்கள் போடப்பட்டு அம்பத்தூர் டவுன்ஷிப்பில் கொடுத்து(அப்போ டவுன்ஷிப் தான்) அதற்கான அங்கீகாரங்கள் எல்லாம் வாங்கியாச்சு.

அப்போ சென்னையில் முக்கிய அலுவலகம் இல்லை என்பதால் பெண்களூரில் உள்ள அலுவலகத்துக்கு இருமுறை போய்ப் பார்த்தார் நம்ம ரங்க்ஸ். நம்மால் இயன்றது கடவுளைப் பிரார்த்திப்பது தான்! ஆகவே நான் சந்தோஷி மாதா விரதம் இருக்க ஆரம்பித்தேன். கடுமையான விரதம். எப்படியோ பதினாறு வாரங்கள் தொடர் சோதனைகளுடன் முடித்தேன். ஒருவழியாகக் கடனுக்கும் அனுமதி கொடுத்து முதல் தவணையும் வர இருந்தது.  இதற்குள்ளாக வீட்டைக் கட்டுவதற்கெனப் போடும் பூமி பூஜையையும் இருமுறை போட்டிருந்தோம்.  இரண்டாம் முறை போட்டதுமே கடன் கிடைத்தது. வீட்டிற்கான அஸ்திவாரம் போட வேண்டும். அம்பத்தூரிலேயே தெரிந்த ஒரு கட்டிடம் கட்டும் நபரைத் தேர்ந்தெடுத்து வேண்டிய ஏற்பாடுகள் செய்து அஸ்திவாரம் போடுவதற்கான செலவுகளைப் பட்டியலிட்டுத் தேவையானவற்றைச் செய்து அஸ்திவாரமும் போட்டோம். அப்போதெல்லாம் அஸ்திவாரம் கட்டிடம் தான்! உள்ளே மூன்றடிக்கு மேல் தோண்டிக் கட்டிடம் கட்டி மேலேயும் இரண்டடிக்கு மேல் எழுப்பிச் சுற்றிலும் கனம் தாங்குவதற்கான "பீம்" கொடுத்து எனக் கவனமாக எல்லாமும் செய்தோம்.


 .

வீட்டின் வாசலில் உள்ள வேப்பமரம். போன வருஷம் எடுத்த படம்.  தெருவுக்கே நிழல்கொடுக்கிறது.இது போனவருஷம் ஆகஸ்டில் போயிருந்தப்போ வீட்டை ஆள் வைத்து நன்கு சுத்தம் செய்திருந்தோம். ஆகையால் குப்பைகள் இல்லை. இப்போ முன் வாசல் தரையெல்லாம் பெயர்ந்து ஒரே குப்பையும், கூளமுமாகக் கிடக்கிறது. இலைகளை அன்றாடம் வாரிக் கொட்டி எரித்துக் கொண்டு வந்தோம். இப்போ எங்கே பார்த்தாலும் இலைகள், குச்சிகள், மேலே ஷெட் கூரை பிய்ந்து தொங்குகிறது. இத்தனைக்கும் வீட்டில் குடித்தனம் இருக்கிறார்கள்! :(

Sunday, June 11, 2017

நினைத்தேன், எழுதுகிறேன்! :)

நல்லெண்ணெய் கிலோ 132 ரூ

கடலை எண்ணெய் கிலோ 80 ரூ

தேங்காய் எண்ணெய் கிலோ 200 ரூபாய்

இன்றைய எண்ணெய் விலை நிலவரம் இது!  மற்றபடி காய்கறிகள் விலை குறைந்த பட்சமாக 30 ரூபாயாக இருக்கிறது. போன வாரம் 20 ரூக்கு விற்ற நாட்டுத் தக்காளி இந்த வாரம் 30 ரூ ஆகிவிட்டது. வாழை மரங்கள் அதிக அளவில் சேதம் அடைந்ததாலும் தண்ணீர் இல்லாததாலும் வாழை இலைக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது!  வாழைத் தண்டு முன்னர் 5 ரூக்குக் கொடுத்தது இப்போது பத்து ரூபாய். ஆனால் எங்களுக்கு அது 2 நாட்களுக்கு வரும். பால்காரர் பால் விலையை 35 ரூக்கு ஒரு தரம், 40 ரூக்கு ஒரு தரம் என விலை ஏற்றம் பண்ணி விட்டார். இரண்டுமே தரம் குறைந்த பாலாக இருந்தது. எங்கள் வாழ்க்கையிலேயே முதல் முறையாக இப்போது ஆவின் பாக்கெட் பால் வாங்குகிறோம். வாடிக்கையாகப் பால் கொடுக்கும் பால்காரர் ஏகப்பட்ட கடன் வைத்து விட்டு எங்கோ காணாமல் போய்விட்டார். நாங்க அம்பேரிக்கா போறதுக்கு முன்னரே எங்களுக்கு 2,500 ரூக்குக் கிட்டத்தட்டக் கொடுக்கணும்! அப்போவே வேறே பால்காரரை ஏற்பாடு செய்துட்டு அவர் விலகிக் கொண்டார். ஆனால் தினம் தினம் இங்கே வந்து கொண்டிருந்தார். விரைவில் பணத்தைத் திருப்பி விடுவேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் கடந்த ஒரு மாதமாக ஆளையே காணோமாம்! பலருக்கும் பணம் பாக்கி என்றார்கள்.


வந்து வீட்டைச் சுத்தம் செய்தது போதாமல் ஏசி, குளிர்சாதனப் பெட்டி, கழிவறைக்குழாய்கள் எனத் தொந்திரவு கொடுத்தனவற்றை எல்லாம் சரி செய்தாயிற்று. எரிவாயுவுக்கு வந்த அன்று பதிவு செய்தோம். உடனே வந்து விட்டது. ஆனால் சிலிண்டர் கொண்டு போடுபவர் தான் மாலை நேரம் ஆகிவிட்டபடியால் மறுநாள் காலை கொண்டு வந்தார். ஏற்கெனவே இருந்த சிலிண்டரில் எரிவாயு இருந்ததால் பிரச்னை இல்லை!

4ஆம் தேதியிலிருந்து தான் அம்பேரிக்காவிலிருந்து கொண்டு வந்த பெட்டிகளைப் பிரித்து எல்லாவற்றையும் அதனதன் இடத்தில் வைத்தோம். இந்த வேலை ஒருவழியாக நேற்றோடு முடிந்தது. இப்போ ஜெட்லாக் இல்லை.   மதியம் ஓய்வாகப் படுத்தால் தூக்கமெல்லாம் இப்போ வரதில்லை. வழக்கம் போல் கொட்டுக் கொட்டு தான்! குட்டிப் பேத்தி ஸ்கைபில் எங்களைப் பார்த்துவிட்டு சந்தோஷம் அடைந்தாலும் தூக்கிக்கவில்லை என்பது தெரிந்து அழுகிறாள். மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது! சுற்றிச் சுற்றிப் பார்த்துத் தேடுகிறாள். :(  இந்த இடைவெளியில் கிடைத்த நேரத்தில் கடுகு சார் அனுப்பிய "கமலாவும் நானும்" புத்தகம் படித்து முடித்தேன். ஏற்கெனவே புஸ்தகா மூலம் வெங்கட் அனுப்பிய "பஞ்ச துவாரகா!" மற்றும் மோகன் ஜி தபாலில் அனுப்பிய "பொன் வீதி" ஆகியன படித்தாயிற்று. பஞ்ச துவாரகா புத்தகத்துக்கு ரஞ்சனி கொடுத்திருக்கும் சிறப்புரையை விட நாம எழுதினால் நன்றாகவா இருக்கும் என்று தோன்றுகிறது. கடுகு சாரை விமரிசிக்கும் தகுதி நமக்கெல்லாம் இல்லை. எவ்வளவு பெரிய மனிதர்! எத்தனை பேரை அறிந்து வைத்திருக்கிறார்! நம்மோடெல்லாம் அவர் பழகுவதே நமக்குப் பெருமை!

அடுத்து தம்பி மோகன் ஜியின் புத்தகமும்! ஏற்கெனவே பலரும் அலசித் துவைத்துக் காயப் போட்டு விட்டார்கள்! அதிலும் வைகோ சார் ஒவ்வொன்றாக அலசுகிறார். இதை விட நாம் என்ன பெரிதாகச் சொல்லப் போகிறோம்.  அவ்வப்போது மோகன் ஜியின் கதைகளைப் படித்து வந்தாலும்
"பாண்டு" கதையிலிருந்து தான் அவரோட பதிவுக்குத் தொடர்ந்து போக ஆரம்பித்தேன்.  தம்பியின் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு முத்து. அதுவும் ஸ்வாதி முத்யம்! ஸ்வாதி நக்ஷத்திரத்தன்று ஆழ்கடலில் உள்ள சிப்பிகள் மேலெழுந்து வருகையில் அதனுள் விழும் அபூர்வமான மழைத்துளியைப் போல், அதிலிருந்து உருவாகும் முத்துக்களைப் போன்றவை இந்தக் கதைகள்! ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமானது.  இதை எழுதுகையில் தினமலர் வாரமலரில் முத்துக்கள் எடுப்பதைக் குறித்து மார்க்கோ போலோ எழுதினதைப் போட்டிருக்கிறார்கள் என்று அதைக் கொடுத்து என்னைப் படிக்கச் சொன்னார் ரங்க்ஸ். இங்கே நான் முத்தைப் பற்றி எழுதியதும் முத்துக்குளிக்கிறவங்க பத்தி ரங்க்ஸ் படிச்சதும் ஒரே சமயத்தில்! :))))

ஏழாம் தேதியன்று காலை சென்னை கிளம்பிப் போய் உறவினர்களில் முக்கியமாகப் பார்க்க வேண்டியவர்களைப் பார்த்துவிட்டு அன்றிரவு அம்பத்தூரில் அண்ணா வீட்டில் தங்கி விட்டு மறுநாள் காலை ஏழரைக்குக் கிளம்பி ஶ்ரீரங்கம் வந்தாச்சு. அம்பத்தூரில் எங்க வீட்டில் குடி இருப்பவர் வீட்டை வைத்திருக்கும் அழகைக் கண்டால் கண்ணீர் வருது! அவ்வளவு மோசமாக வைத்திருக்கிறார்.  இதை விற்றுவிடலாம் என்று போனவருஷம் முடிவு பண்ணிச் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. இப்போதோ நிலங்கள் விற்பது, வாங்குவது போன்றவற்றில் முதலீடு செய்யக் கட்டுமானத் துறையில் இருப்பவர்கள் யோசிப்பதாலும் வியாபாரம் மந்தமாக இருக்கிறது என்கிறார்கள். அதோடு அரசாங்கமும் வழிகாட்டும் விலையைக் குறைத்துள்ளது. ஆகவே விற்பவர்கள் இப்போது விற்றால் நல்ல விலை கிடைக்காது என்கிறார்கள். அந்த வீட்டில் கழித்த நாட்களை நினைத்தால் ஒரு பக்கம் சந்தோஷமாகவும் இன்னொரு பக்கம் வருத்தமாகவும் இருக்கிறது. என்றாலும் நம் வீடு இவ்வளவு மோசமாக இருக்கே என்னும் எண்ணம் மனதில் வருத்தம் அளிக்கிறது. பார்க்கலாம்! கடவுள் இதற்கும் ஒரு தீர்வைக் கட்டாயம் வைத்திருப்பார். அது விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறோம்.!

Saturday, June 03, 2017

ஒரு மாதிரிச் சமாளிச்சாச்சு!

நாங்க யு.எஸ். போன பதினைந்து நாட்களுக்கெல்லாம் மும்பையில் என் மாமியார் இறந்து விட்டார். யு.எஸ். போகும் முன்னர் மும்பை சென்று அவங்களைப் பார்த்து விட்டே திரும்பி இருந்தோம். வயது 93க்கு மேல் ஆகி விட்டது. எப்போ வேணாலும் என எதிர்பார்ப்புடன் இருந்தாலும் கிளம்பும்போது உடல் நலமாக இருப்பதாகத் தெரிந்து கொண்டே கிளம்பி இருந்தோம். அங்கேயும் நாங்கள் போகவேண்டிய சூழ்நிலை. ஆனால் அங்கிருந்து எங்களால் உடனே திரும்ப முடியவில்லை. மாமியாருக்கு ஏற்கெனவே உடம்பு முடியலைனாலும் பெரும்பாலும் வயதானதின் தளர்வே என்று மருத்துவர்கள் சொன்னார்கள். எல்லா உறுப்புக்களும் சரியாகவே வேலை செய்வதாகவும் சொன்னார்கள். சரி எப்படியும் ஆறு மாசம் தாங்கும்னு நினைச்சோம். ஆனால் தாங்கலை! அப்போத் தான் போயிருக்கோம். சரியாப் பதினைந்து நாட்களே! உடனே திரும்புவதெனில் பல பிரச்னைகள்! மனப் போராட்டங்கள்! குழந்தையைப் பிரியணும்! அதோட நாங்க போனதே மருமகளுக்கு உதவியாக இருக்கணும்னு தான்! பதினைந்து நாட்களில் குழந்தையும் ஒட்டிக் கொண்டு விட்டாள்.

அப்படியும் டிக்கெட்டுக்கு முயற்சித்தோம். எங்க டிக்கெட் சென்னைக்கு வாங்கி இருந்தது. நாங்க போக வேண்டியது மும்பை! அது ஒரு பிரச்னை என்றால் இம்மாதிரிக் காரியத்துக்கு எனக் கிளம்பி விட்டுப் பின்னர் திரும்பி ஹூஸ்டனுக்கு வந்தால் தான் மனத் திருப்தியாக இருக்கும் போல இருந்தது. ஆனால் இங்கே வந்துவிட்டால் பத்துநாட்கள் காரியம் முடிந்தாலும் அடுத்தடுத்து மாதாந்திரக் காரியங்கள் இருக்கும். அதையும் விட முடியாது. என்ன செய்வது எனக் குழம்பிக் கொண்டு இருந்தோம். திரும்ப ஒரு மாசத்துக்குள்ளாக ஹூஸ்டன் வந்தால் விசா பிரச்னை! பல்வேறு மனக்குழப்பங்களுக்கிடையே எங்கள் குடும்ப புரோகிதரைக் கலந்து ஆலோசித்தோம். அவர் போனது போனதாகவே இருக்கட்டும். ஆறு மாசங்களையும் முடிச்சுட்டு வந்துடுங்க. திரும்பி வந்து கர்மாவுக்கான காரியங்களைப் பண்ணிக்கலாம். சாஸ்திரத்தில் அதற்கான விதிகள் உண்டு. இம்மாதிரி நடந்ததற்கான முன்மாதிரிகளும் உண்டு என்று சொன்னதோடு ஶ்ரீராமரே தன் அப்பா தசரதனுக்கு அவர் இறந்து பல நாட்கள் கழித்தே பரதன் மூலம் தகவல் தெரிந்து கடைசிக் காரியங்களைச் செய்தார் என்பதையும் எடுத்துக் கூறினார்.

என்றாலும் மனம் சமாதானம் ஆகவில்லை. ஆனால் அதோடு புரோகிதர் எங்களைக் கோயிலுக்குப் போகக் கூடாது என்றும் யாரையும் நீங்களாகப் போய்ப் பார்க்க வேண்டாம் என்றும் சொல்லி இருந்தார். ஆகவே இம்முறை எந்தக் கோயிலுக்கும் போகவே இல்லை. வேறே எங்கேயும் போகவே இல்லை. நண்பர் ஈரோடு நாகராஜ் ஹூஸ்டனுக்கே வந்திருந்தும், எங்க வீட்டிலிருந்து இரண்டு, மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தார் என்பது தெரிந்தும் போய்ப் பார்க்க மனம் இடம் கொடுக்கவில்லை. அவரிடம் என் நிலைமையைத் தெளிவாக்கி விட்டேன். அவரும் சரிதான் என ஒத்துக் கொண்டார். பல ஆண்டுகளாகச் சந்திக்க நினைத்தது! கிட்ட இருந்தும் சந்திக்க முடியவில்லை. கச்சேரிகளுக்கு அழைப்புக் கொடுத்தும் கோயில் வளாகங்களில் நடந்ததால் போகவும் இல்லை.

அங்கே இருந்த சமயம் நண்பர்கள் யாரையும் தொடர்பு கொள்ளவும் இல்லை. வழக்கம் போல் அம்பி தான் நான் வந்திருப்பது தெரிந்து முதலில் பேசினார். அவரிடம் விஷயம் ஏதும் சொல்லிக்கவில்லை. அம்பி பையருக்குப் பூணூல் போட்டார். அதுக்காக இந்தியா வந்திருந்தார். அதன் பின்னர் நண்பர் டாக்டர் எஸ்கே(சங்கர் குமார்), மற்றும் ஒரு அரிசோனன் ஆகியோர் தொடர்பு கொண்டார்கள். சங்கர் குமாரும் நிலைமையைப் புரிந்து கொண்டு ஆறு மாதம் கழித்துச் செய்து கொள்ளலாம். அதுவரை கோயில்களுக்குப் போகாமல் இருங்கள். என்றே சொன்னார். இங்கே வீட்டில் குழந்தை இருந்ததால் கோயிலில் போய் தெய்வத்தை தரிசனம் செய்ய வேண்டும் என்ற கட்டாயமும் இல்லாமல் போயிற்று.

ஒவ்வொரு நாளையும் ஒரு யுகம் போல் கழித்துக் கொண்டிருந்தோம்.   தப்புப் பண்ணிட்டோமோனு பல நாட்கள் குழப்பிக் கொண்டிருப்போம். திரும்ப ஊருக்குக் கிளம்பும்  நாட்களை எண்ணிக் கொண்டே வந்தோம். இதே நினைப்பு! இந்தியா திரும்பியும் ஆகி விட்டது. வந்த உடனேயே காரியங்கள் ஆரம்பித்தன. இன்றோடு முடிந்தது. மனம் பூரணத் திருப்தி அடையாவிட்டாலும் (சூட்டோடு சூடாகச் செய்வது போல் வருமா) ஓரளவுக்கு மனம் சாந்தி அடைந்திருக்கிறது. இனி மாதாமாதம் செய்வதற்கான உடல் தெம்பையும் மனோபலத்தையும் ஆண்டவன் அருள வேண்டும். அதற்காகப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கோம். 

Sunday, May 28, 2017

வலை உலகில் நானும் இருக்கேனே! :)

அங்கே இருக்கையில் இந்தியா நினைவு. இங்கே வந்ததும் குழந்தை நினைவு! வாட்டி எடுக்கிறது. என்றாலும் குழந்தைக்கு ஏதோ கொஞ்சம் புரிந்திருக்கு போல! அதிகம் ஏங்கவில்லை என்று பையர் சொன்னார். தேடி இருக்கிறாள். ஆனால் நாங்கள் பெட்டி, படுக்கையுடன் காரில் ஏறுவதைப் பார்த்ததாலேயோ என்னமோ ரொம்பவே அழவில்லை. அதே போன மாசம் நாங்க ஒரு பத்து நாட்கள் பொண்ணு வீட்டுக்குப் போனப்போ ரொம்ப அழுதிருக்கா! ஏங்கி இருக்கா! முகத்தைப் பார்த்தாலே தெரிஞ்சது! ரொம்பக் கஷ்டமா இருந்தது. இம்முறை கொஞ்சம் பரவாயில்லை என்பதோடு இவங்க நம்மோட நிரந்தரமா இருக்கிறவங்க இல்லைனு புரிஞ்சு வைச்சுண்டா போல! :) நேத்து ஸ்கைபில் பார்க்கையில் ஒரே குதியாட்டம் தான்!அழகாக் கிருஷ்ணா, ராமா, கோவிந்தா எல்லாம் சொன்னா!  தூக்கச் சொல்லிக் கேட்டா! அவங்க அப்பா ஃபோனில் பேசுகையில் ஃபோனைப் பிடுங்கித் தன்னிடம் கொடுக்கச் சொல்றா! நான் செல்லமாகக் கூப்பிடும் பெயரால் கூப்பிட்டதும் நன்றாகப் புரிந்து கொள்கிறாள்.


எப்போவுமே ஜெட்லாக் எனக்குத் தான். இம்முறை யு.எஸ்.ஸில் இருக்கிறச்சே ஜெட்லாக் அதிகம் படுத்தலை. ஆனால் இங்கே வந்ததும் ரொம்பவே படுத்தல். ஜெட்லாக் கொஞ்சம் கொஞ்சமாகச் சரியாகிக் கொண்டு வருகிறது. இம்முறை நாங்கள் திரும்பி வருகையில் ஹூஸ்டனில் இருந்து விமானம் கிளம்பவே தாமதம். போக்குவரத்து அதிகம் என்பதால் விமானம் கிளம்ப ஒரு மணி நேரத்துக்கும் மேல் தாமதம் ஆனது. ஆனாலும் சரியான நேரத்துக்கு ஃப்ராங்ஃபர்ட் வந்து விட்டோம். அங்கேயும் சரி, ஹூஸ்டனிலும் சரி கடுமையான சோதனை இம்முறை. ஹூஸ்டனில் எப்போதுமே சோதனை இருக்கும். இம்முறை புடைவை மடிப்புக்களை எல்லாம் பிரித்துப் பார்த்தார்கள். அதே போல் ஃப்ராங்ஃபர்ட்டிலே கால் செருப்பைக் கூட ஸ்கான் செய்து பார்த்தார்கள். எப்போவும் ஃப்ராங்ஃபர்டிலே சோதனை இருக்காது; அல்லது கடுமையாக இருக்காது. இம்முறை கடுமையான சோதனை!

உணவும் ஒழுங்காக வந்தது. என்றாலும் எங்களால் சாப்பிட முடியவில்லை. என்பதால் ஜூஸ் மட்டும் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டு இருந்து விட்டோம். இங்கே வருவதற்கு முன்னரே வீடு சுத்தம் செய்ய ஆட்களை வரச் சொல்லி ஏற்பாடு செய்திருந்ததால் வசதியாக இருந்தது.  இன்னிக்கு மத்தியானம் தூங்கக்கூடாது என்று பிடிவாதமாக இணையத்தில் உட்கார்ந்திருக்கேன். கடுகு சார் "கமலாவும் நானும்" புத்தகம் அனுப்பி இருக்கார். புத்தகம் எப்போவோ வந்துடுச்சு! இங்கே எடுத்து பத்திரமாக வைத்திருந்தார்கள். அதைத் தான் கொஞ்சம் கொஞ்சமாகத் திரட்டுப் பால் சாப்பிடுவது போல் படித்து வருகிறேன்.  அங்கே இருக்கையில் இன்னும் இரண்டு படங்கள் பார்த்தேன். ஒண்ணு ஷாருக்கான், ஜூஹி சாவ்லா நடிச்ச 1,2 கா ஃபோர் படம். ரொம்ப ரொம்ப சுமார் ரகம். இன்னொண்ணு "கால்" படம். கால் அல்லது காலா? தெரியலை.

ஆனால் காடுகள் அழிவதைக் குறித்த ஓர் படம்னு சொல்லலாம். அதிலே கொஞ்சம் ஆவியும் வருது!  இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ஜிம் கார்பெட் நேஷனல் பார்க்கில் உள்ள ஒரு புலி இரண்டு இங்கிலாந்து நாட்டுப் பயணிகளைக் கொன்று தின்றுவிடுவதாகச் செய்தி வருகிறது. தொடர்ந்து அடுத்தடுத்துக் கொலைகளைப் புலி செய்வதாகச் சொல்லி அந்த ஆட்கொல்லிப் புலியைப் பற்றித் தகவல் அறியச் செல்கிறார் ஒரு வன ஆர்வலர். ஜான் ஆபிரஹாம் இந்த வேடத்தில் வருகிறார். அவர் மனைவியாக ஹேமமாலினியின் பெண் இஷா டியோல் நடிக்கிறார்.  தேவ் மல்ஹோத்ரா என்னும் வனவிலங்குகளை வேட்டை ஆடும் இளைஞனாக விவேக் ஓபராய்! அவருக்கு ஜோடி முன்னாள் உலக அழகி லாரா தத்தா! இந்த இரண்டு குழுக்களும் சந்திக்கையில் நடக்கும் நிகழ்வுகளே படத்தில் காண முடியும்!  அஜய் தேவ்கன் முக்கியமான வேடத்தில் வருகிறார். அவருடைய மாறா முகபாவம் இந்த வேடத்துக்குப் பொருந்தத் தான் செய்கிறது.

நெஞ்சைக் கலக்கும் பீதியான உறைய வைக்கும் சம்பவங்கள்! கடைசியில் உண்மை தெரிந்து உயிருக்குப் பயந்து ஓடும் விவேக் ஓபராய், லாரா தத்தா, ஜான் ஆபிரஹாம் ஆகியோர் தப்பினார்களா? படத்தில் தெரிந்து கொள்ளுங்கள்!  ஜிம் கார்பெட் நேஷனல் பார்க்கிலேயே பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன. உண்மையான மனித ரத்தம் கிட்டத்தட்ட மூன்று லிட்டர் அளவு பயன்படுத்தப்பட்டிருக்கிறதாம். புலிகளும் நிஜமான புலிகளாம். க்ளேடியேட்டர் படத்தில் நடித்த புலிகள் என்கின்றனர். அவற்றை இங்கே வைத்து உலாவ விட்டுப் படம் எடுக்க முடியாது என்பதால் பாங்காக்கில் அதன் இஷ்டத்துக்கு உலவ விட்டுப் படம் எடுத்தார்களாம். ஒரு முறை பார்க்கலாம். ஷாருக்கான் இந்தப்படத்தின் தயாரிப்பில் பங்கு பெற்றிருக்கிறார். அறிமுகப் பாடலில் வந்து நடனம் ஆடுகிறார். அதைப்பார்த்தால் படம் பார்க்கவே தோன்றவில்லை! ஆனால் படம் பார்த்ததும் எழுந்திருக்கத் தோன்றவில்லை. :)

ஒரு வாரமா அதிகமா இணையத்துக்கு வரலையா பார்வையாளர் எண்ணிக்கை குறைந்து போய் நூறு, நூற்றைம்பதுனு ஆயிருக்கு! அதிலும் நேற்று 88 நபர்களே தானாம்! போனால் போகட்டும்னு சொல்லிட்டேன். இன்னும் ஒரு வாரம் ஆகும் நிதானத்துக்கு வர! :)

Tuesday, May 23, 2017

சொர்க்கத்துக்குத் திரும்பியாச்சு!

கடந்த பதினைந்து நாட்களாகவே தொடர்ந்து வேலை மும்முரம். நடுவில் குழந்தையுடன் பொழுதுபோக்கு என்று நாட்கள் கழிந்து விட்டன. ஞாயிறு அன்று 21 மே மாதம் அங்கிருந்து கிளம்பியாச்சு! இதோ இன்று காலை ஏழு மணி அளவில் ஶ்ரீரங்கம் வந்து சேர்ந்தாச்சு! வீட்டைச் சுத்தம் செய்ய ஆட்கள் வந்திருக்கின்றனர். இதுக்கு நடுவில் அலைபேசி இணைப்பு வேலை செய்யாமல் அங்கே அம்பேரிக்காவில் பையர், பெண்ணுக்கு நாங்க வந்து சேர்ந்துட்டோமானு கவலை. ட்ராவல்ஸ்காரரைத் தொடர்பு கொண்டு எங்களுடன் பேசினார்கள். குழந்தையை விட்டுட்டு வந்தது தான் கொஞ்சம் இல்லை, நிறையவே வருத்தம்! ஆனால் அங்கேயே உட்காரவும் முடியாது. இங்கே முக்கியமானதொரு கடமையை முடிக்கணும்.

இன்னிக்கு என்னுடைய பிறந்த தேதி! ஹிஹிஹி, வழக்கம்போல் ஏப்ரல் மாதத்தில் என்னுடைய சான்றிதழ்களில் இருக்கும் பிறந்த தேதி வந்துட்டுப் போயாச்சு. ஆனால் ஒரிஜினல் அக்மார்க் பிறந்த தினம் இன்று தான். கிழமையும் தேதியும் இந்த வருடம் சேர்ந்தே வந்திருக்கு! நக்ஷத்திரம் தனியாக வரும்! அப்போவும் கொண்டாடிடுவோம். முகநூல் மூலமும் வாட்ஸப் மூலமும் வாழ்த்துத் தெரிவித்திருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி! யாருடைய பதிவையும் படிக்கவில்லை. மெதுவாக வருவேன். :) தப்பாய் எடுத்துக்காதீங்க!