எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, January 23, 2011

கல்சட்டி பார்க்கறீங்களா, கல்சட்டி?

 மின் தமிழ்க் குழுமத்திலே சில நாட்கள் முன்னால் உணவு சமைக்கும் புராதனப் பாத்திரங்கள் பற்றிய ஒரு கலந்துரையாடலில் ராஜம் அம்மா, அந்நாளைய அடுப்பு, கல்சட்டி போன்றவற்றின் படங்களைப் பகிர்ந்து கொண்டார். அப்போது நான் எங்க வீட்டிலே இப்போது கல்சட்டியில் சமைக்கும் வழக்கம் வைத்திருக்கிறேன் என்று சொன்னேன். அதோடு வெண்கல உருளியிலும் சமைப்பேன் என்றும் கூறி இருந்தேன். மேலும் விறகு அடுப்பிலேயும் சமைச்சிருக்கேன். மண்ணால் கைகளால் போடப்பட்ட மண் அடுப்பு. அதிலேயும் இரும்பு அடுப்பிலேயும் சமைச்சிருக்கேன். கல்யாணம் ஆகிவந்துதான் சமைச்சிருக்கேன். கிராமத்திலே குமுட்டி அடுப்புக் கூட மண்ணாலேயே போட்டிருப்பாங்க. நான் இரும்புக் குமுட்டியிலே சமைச்சிருக்கேன். இப்போவும் இரண்டு வருஷங்கள் முன்னால் ஒரு மழைநாளில் கை கொடுத்ததையும் எழுதி இருக்கேன்.
 
Posted by Picasa
இந்தக் கல்சட்டியில் பழைய சாதம் வைத்துச் சாப்பிட ருசி மிக அருமையாக இருக்கும். முதல் நாள் மிச்சம் இருக்கும் சோற்றை இந்தக் கல்சட்டிகளில், இதைவிடப்பெரியதாக இருக்கும் கல்சட்டி எல்லாம். இது ரொம்பச் சின்னது. பெரிய கல்சட்டிகளில் போட்டுத் தண்ணீர் ஊற்றி மூடிவைப்பார்கள். மறுநாள் காலை அந்த நீர் ஆகாரம் வேண்டும் என்பவர்களுக்கு அந்த நீர் கிடைக்கும். அப்பா!!!! என்ன ஜில்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் தெரியுமா! உங்க பெப்சி, கோகாகோலா எல்லாம் இது கிட்டே கூட வரமுடியாது! :P அதிலே உப்புக் கொஞ்சம் போலப் போட்டு மோர் ஒரு கரண்டி ஊற்றிக் குடித்தால் சொர்க்கம் எட்டிப் பார்க்கும். பழைய சாதத்தை எங்க அம்மாவின் அம்மா( அம்மாவழிப் பாட்டி, நாங்க தாத்தாம்மா என்று கூப்பிடுவோம்) அவங்க உப்புச் சேர்த்து நல்ல எருமைத் தயிரை விட்டு கெட்டியாகப் பிசைந்து முதல் நாள் குழம்பையும், ரசத்தின் அடி மண்டி(பருப்பாய் இருக்குமே அது) சேர்த்துச் சுட வைத்திருப்பார்கள். இது சுட வைக்கவே ஒரு தனி குமுட்டி நிரந்தரமா இருக்கும். அந்தக் குழம்பை ஊற்றிக் கொடுப்பாங்க.

அதுவும், நாங்க பேரன், பேத்திகள் எல்லாம் சுத்தி வட்டமா உட்கார்ந்துப்போம். அவங்க எல்லாரோட கையிலேயும் ஒரு உருண்டை சோற்றைப் போட்டுக் கட்டை விரலால் குழி செய்துக்கச் சொல்லி அந்தக் குழியில் அந்தக் குழம்பை ஊற்றுவாங்க. கூடவே அவங்களுக்கும் தாத்தாவுக்கும் கல்யாணம் ஆன கதைகள், எங்க எங்க அம்மா, அப்பா திருமணக் கதைகள், கூடவே எங்க படிப்பைப் பற்றியும் ஜாடைமாடையான விசாரிப்புகள், அவங்க அவங்க பேச்சு சுவாரசியத்திலே வயிறு கொள்ளும் அளவு கூடத் தெரியாமச் சாப்பிட்டிருப்போம். இப்போ?? குமுட்டினா தெரியுமா? கல்சட்டினா தெரியுமா? ஈயச் செம்புனா தெரியுமா? (எங்க வீட்டிலே அதிலே தான் ரசம் இன்னிக்கும், என்னிக்கும்) விறகு அடுப்புன்னா தெரியுமா?? பால்காரங்க வீட்டிலேயும், தச்சுவேலை செய்யும் ஆசாரிகள் வீட்டிலேயும் மரத்தூளைப் போட்டு அடுப்பு எரிப்பாங்க. ஏனென்றால் அது தான் மலிவாயும், விலை இல்லாமலும் கிடைக்கும்னா?? தெரியலை. இன்னைக்கு எல்லாத்தையும் ஷோகேஸிலே வைச்சுப் பார்க்கக் கூடக் கிடைக்குமானும் தெரியலை.

எங்கே போயிட்டிருக்கோம்?? ஒண்ணும் புரியலை. ஆனால் முன்னேற்றம்னு சொல்றாங்க.

இருக்குமோ? :(

41 comments:

  1. கீதா! அருமை!
    அப்படியே அந்தக்காலத்தைக் கொண்டு வந்தீர்கள்!
    நினைவுகள் சுவைக்கிறது!
    இன்னும் கல்சட்டி,கும்முட்டி எல்லாம் தேவைக்கு உபயோகிக்
    கிறீர்கள் என்பதைப் பாராட்டுகிறேன்!
    சேலம் பக்கம் மாக்கல்சட்டி,மடக்குகள் சிறியதும்,
    ரொம்பப் பெரியதுமாய் கிடைக்கும்..என் சின்னவயசில்..
    வாணலிக்கு பதில் பெரிய கல்மடக்கில்,
    பட்சணம்,பலகாரங்கள் செய்வார்கள்!(அந்தநாள் ஞாபகம்
    நெஞ்சிலே வந்ததே...)

    அன்புடன்,
    தங்கமணி.

    ReplyDelete
  2. //இந்தக் கல்சட்டியில் பழைய சாதம் வைத்துச் சாப்பிட ருசி மிக அருமையாக இருக்கும். முதல் நாள் மிச்சம் இருக்கும் சோற்றை இந்தக் கல்சட்டிகளில், இதைவிடப்பெரியதாக இருக்கும் கல்சட்டி எல்லாம்...//

    எனது 'ஆத்மாவைத் தேடி...' தொடரில் ஒரு அத்தியாயத்தில் இந்த கல்ச்சட்டி சாதம், ரவுண்டு கட்டி உட்காந்து கையை குவித்து வாங்கிக் கொள்ளும் சாதத்தின் நடுவில் குழி பண்ணிக் கொண்டு அதில் தேனாய்த் தித்திக்கும் வத்தக் குழம்பு வார்த்துக் கொள்ளுதல் என்று இதையெல்லாம் பற்றி பழைய நினைவுகளைத் திரட்டி எழுதியிருக்கிறேன்...

    ReplyDelete
  3. You brought all "andha kala ninaivugaL" from my thatha patti veedu. Thanks for that. I have only one kumiti in which we do "Prasadam" during pooja if we perform pooja at home. Adhuvae aburoobam ayiduthu ippo.:(.All our poojas are happening at Mutt,now a days.

    ReplyDelete
  4. இப்ப எல்லாத்துக்கும் குளிர்சாதனப்பெட்டி தான் :((

    ReplyDelete
  5. நினைவுகளை மலர வைத்த பதிவு.
    அறுபதுகளின் ஆரம்பத்தில் பாட்டி கையால் கல்சட்டியில் இருந்து சாப்பிட்டதும், அம்மா தனது கடைசி காலம் (2008) வரை கல்சட்டியை விடாமல் ஆண்டது வரை என் நினைவில் நிழலாடுகிறது. நீங்களாவது இவற்றையெல்லாம் கையாளுகிறீர்களே. :)))))
    பாராட்டுக்கள். நன்றி கீதாஜி.

    ReplyDelete
  6. ///ஒரு உருண்டை சோற்றைப் போட்டுக் கட்டை விரலால் குழி செய்துக்கச் சொல்லி அந்தக் குழியில் அந்தக் குழம்பை ஊற்றுவாங்க.///// miss this.... how nice that would be... nagareegamngra perla nammai maamey tholaithukkondu thirigirom.... :(

    ReplyDelete
  7. கல்சட்டி,கும்முட்டி சேலம் பக்கம் மாக்கல்சட்டி,மடக்குகள் சிறியதும்,
    ரொம்பப் பெரியதுமாய் கிடைக்கும்.
    please detail address ?

    ReplyDelete
  8. பாலாஜி, இப்பல்லாம் சுத்தி உட்காரக்கூட பசங்க கிடையாது! எங்க பாட்டி பேரப்பசங்களை தோட்டத்தில் நல்லா வேலை வாங்கிட்டு இப்படி கையிலே இரண்டாஞ்சாதம் போட்டது நினைவுக்கு வருது!

    ReplyDelete
  9. வாங்க அம்மா, நல்வரவு, கல்சட்டிப் பழையதின் ருசி இப்போது புதுசா சமைச்ச சாதத்திலே இருக்கிறதில்லை! :( நீங்க சொல்ற கல்மடக்குப் பார்த்திருக்கிறேன். பெரிய பெரிய விசேஷங்களுக்குப் பயன்படுத்துவார்கள். இங்கே கும்பகோணத்தில் கல்சட்டி இன்னமும் கிடைக்கிறது. இப்போது பயன்படுத்தும் கல்சட்டி கும்பகோணம் கல்சட்டிதான். ஈயப் பாத்திரங்களும் கும்பகோணத்தில் வாங்கியவையே. என்னோட பழைய ஈயச் செம்பைப் போட்டுவிட்டு இவற்றை வாங்கினேன்.. எல்லாமே வெள்ளீயம். :)))))))

    ReplyDelete
  10. எனது 'ஆத்மாவைத் தேடி...' தொடரில் ஒரு அத்தியாயத்தில் இந்த கல்ச்சட்டி சாதம், ரவுண்டு கட்டி உட்காந்து கையை குவித்து வாங்கிக் கொள்ளும் சாதத்தின் நடுவில் குழி பண்ணிக் கொண்டு அதில் தேனாய்த் தித்திக்கும் வத்தக் குழம்பு வார்த்துக் கொள்ளுதல் என்று இதையெல்லாம் பற்றி பழைய நினைவுகளைத் திரட்டி எழுதியிருக்கிறேன்...//

    படிச்சிருக்கேன் ஜீவி சார், நானும் இந்தப் பழையது பற்றிக் கடைசிக்கட்டி மாம்பழம் னு ஒரு பதிவு எழுதினேன். சுட்டி தேடறேன். நன்றி வரவுக்கும், கருத்துக்கும்.

    ReplyDelete
  11. வாங்க எஸ்கேஎம், பொங்கல் எல்லாம் முடிஞ்சதா?? குமுட்டி அடுப்பிலே தான் எங்க வீடுகளிலேயும் சிராத்தத்திற்குச் சமைப்போம். இப்போச் சில வருடங்களாய்த் தான் எரிவாயு அடுப்பு! :)))))) இப்போவும் ஒரு அவசரம்னா குமுட்டி கைகொடுக்கும். ஒரு குமுட்டியை நானே எடுக்கிறாப்போல் வைச்சிருக்கேன்.

    ReplyDelete
  12. எல்கே, குளிர்சாதனப் பெட்டியில் வைச்சுச் சாப்பிடறது அவ்வளவா உடல்நலத்திற்கு நல்லது இல்லைனு நினைக்கிறேன். :( ஆனாலும் இன்றைய அவசர உலகில் ஒரு வாரத்துக்குக் கூடக் குளிர்சாதனப் பெட்டியில் சமைச்சு வைக்கிறாங்க. எங்க வீட்டுலே இன்னும் அந்த வழக்கம் வரலை. தேவைக்கும், அப்போதைய உடல்நிலைக்கும் ஏற்றவாறு கொஞ்சமாய்ச் சமைக்கிறேன். எப்போதுமே இப்படித்தான். எங்காவது பத்துநாளைக்குள் திரும்பும்படியாய் ஊர்களுக்குப்போகும்போது ஊறுகாய், சில சட்னி வகைகள், மிளகுகுழம்பு, புளிக்காய்ச்சல் போன்றவற்றைக் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதுண்டு. நான் ஊரிலே இருந்தால் அவற்றையும் வைப்பதில்லை. முக்கியமாய் ஊறுகாய்களை வைக்கவே மாட்டேன். :)))))))

    ReplyDelete
  13. வாங்க அஷ்வின் ஜி, இந்த ஒரு கல்சட்டிக்கு எத்தனை நாள் காத்துண்டிருந்தேன் தெரியுமோ? எங்க அம்மாவோட கல்சட்டியை எல்லாம் மதுரையிலேயே கொடுத்துட்டு வந்துட்டாங்க. அப்போ நான் வடக்கே இருந்தேன். மாமியோரடதும் அப்படியே! கிராமத்திலேயே கொடுத்தாச்சு. அதிலே மாவடு ஊறுகாய்ய் போட்டால் எப்படி இருக்கும் தெரியுமா? எப்படியாவது கல்சட்டி வேணும்னு நான் ஆசைப்பட்டு வாங்கியது இதுதான்னு நினைக்கிறேன். உருளி, வெண்கலப்பானை எல்லாம் இருக்கு. அதிலேயும் இப்போதும் சமைப்பேன்! :))))))))

    ReplyDelete
  14. பாலாஜி, உண்மைதான், வெளிநாட்டுக்கலாசாரம், உள்ளே வந்து நம் நாட்டின் அரிய கலாசாரங்களை அடியோடு ஒழித்துவிட்டது! :((( மக்களாய் மனம் மாறணும், என் மாதிரி ஒண்ணு , ரெண்டு பைத்தியம் இருக்காதா? :)

    ReplyDelete
  15. குணா, சேலம் பத்தி எனக்குத் தெரியாது, தங்கமணி அம்மாவையோ, எல்கேவையோ கேளுங்க. அவங்க ரெண்டு பேருமே அந்தப் பக்கம் தான்! :D கும்பகோணத்தில் பெரியகடைத்தெருவில் ஈயச் செம்பு இரண்டு , மூன்று கடைகளில் கிடைக்கும். கல்சட்டி கும்பேஸ்வரர் கோயில் கடை வீதியில் எல்லாக் கடைகளிலும் கிடைக்கும். இதிலே டூப்ளிகேட் கல்சட்டியும் இருக்கு. நான் புழங்கிக்கொண்டே இருந்ததால் என்னால் கண்டு பிடிக்கமுடியும். ஆகவே பார்த்து வாங்கவேண்டும். :)))))

    ReplyDelete
  16. வாங்க திவாஜி, எங்க அப்பா வீட்டிலே காலம்பர ஒன்பது மணிக்குச் சாப்பாடுங்கறதாலே மத்தியானமா ஒரு மணிக்கு இரண்டாம் சாதம் போடுவாங்க. பாட்டி வீட்டிலே காலம்பர பழையது! என்னோட ஓட் பழையதுக்கே! :))))) ஜில்ல்ல்ல்ல்லோ ஜில்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்

    ReplyDelete
  17. நல்ல பதிவு கீதாம்மா !

    ஹி ஹீ வேற என்ன சொல்றதுன்னு தெரியலே

    ஈய பாத்திரத்தில் ரசம் வைக்க வேண்டாம் பதிலாக செம்பு பாத்திரத்தில் கூட வைக்கலாம் என்று சொல்ல கேட்டு இருக்கிறேன்

    ReplyDelete
  18. கல்சட்டி இப்பத்தான் பார்க்கிறேன். (பதிவில் பொய் சொல்லமாட்டேன் என்று புதுவருஷ முடிவு இப்படியாயிடுச்சே!)

    ReplyDelete
  19. ப்ரியா, செம்புப் பாத்திரத்தில் (தாமிரம்) எல்லாம் ரசம் வைக்க முடியாது! :)))))) வீணாகிவிடும், கச்சிப்போயிடும்னு சொல்லுவாங்க. ஒரு சில பித்தளையிலே கூட கச்சிப் போகும். செய்ய முடியாது. அவற்றில் சமைக்கவேண்டுமானால் உள்ளே ஈயம் தான் பூசணும்! :)))))))))) ஈயம் தான் காரீயமா, வெள்ளீயமா என்பது பழகினாத் தான் தெரியும்! காரீயம் தான் விஷத் தன்மை உள்ளது. ஆகவே அது கூடாது! நாளைக்கு வெண்கலப்பானை, குமுட்டி, ஈயச் செம்புகள் னு படம் எடுத்துப் போடறேன். :D

    ReplyDelete
  20. அப்பாதுரை!, உண்மையை உரக்கச் சொன்னதுக்கு ஒரு ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

    ReplyDelete
  21. நீராகாரத்துல ஒரு ஸ்பூன் நல்லெண்ணை விட்டு தருவா. அமிர்தமாக இருக்கும். கல்சட்டில மோர்ஞ்ச்சாதம் கலந்து வைங்கொ . குழம்பு ரஸ மண்டியோட ஒரெ ஒரு மாவடு எனக்கு ப்ளீஸ்.மொட்ட மாடில நிலால சாப்படலாம் என்ன?? வந்துண்டே இருக்கேன் டிஸம்பர்ல!!

    ReplyDelete
  22. //மொட்ட மாடில நிலால சாப்படலாம் என்ன?? வந்துண்டே இருக்கேன் டிஸம்பர்ல!!//
    டிஸம்பர்ல மொட்டை மாடி நிலாவிலா? ஹிஹிஹிஹி
    :-)))

    ReplyDelete
  23. எ+எ+எ = எ அப்படீன்னு ஒரு தமிழ் சமன்பாட்டை இங்கிலீஷ் வாத்தியார் சொல்லுவார்.

    எட்டு நாள் பழையது + எருமை மாட்டுத் தயிர்+ எலுமிச்சங்காய் ஊறுகாய்= எழுப்ப முடியாத தூக்கம் :))

    நீங்க பழையதைப் பத்தி சொன்னதும் இது ஞாபகம் வந்திடுச்சு.

    கல்சட்டி பழையதை சாப்பிட்டதில்லை. ஈயப்பாத்திர ரசம்-எஸ். குமுட்டி-ல சுட்ட அப்பளம்-எஸ். அப்புறம் காபிக் கொட்டைய ஃப்ரஷ்ஷா கையால சுத்தற ரோஸ்டர்ல வறுத்து, கையால சுத்தற மெஷின் லேயே பொடி பண்ணி அம்மாக்கு நெறைய வாட்டி ஹெல்ப் பண்ணியிருக்கேனாக்கும். அது மணக்க மணக்க வரும் காபி.
    சரி சரி கொசுவத்தி ரொம்ப சுத்தியாச்சு.போறும்.

    ReplyDelete
  24. Oops !! உங்களுக்கு வின்டெரா மிஸ்டர் திவா!! . என்னப்பா இப்படி ஜோக் அடிக்கிறீங்க. மெட்ரஸ் அப்பவும் புழுங்கத்தானே செய்யறது . கொஞ்சம் குளிர்னு எனக்கு பட்டது நாங்கள் இந்ததடவை போன மட்டில் சோலாபுர் ஷீரடில மட்டும் தான். ஸ்ரிங்கேரி கூட இதமா இருந்ததே தவிர குளிரல்லியே?

    ReplyDelete
  25. கும்ப கோணத்தில கிடைக்கறதா.
    போக வேண்டியதுதான். எங்க வீட்டு கல்சட்டியில் எல்லாம் பொன்சாய் செடி வளர்ந்துண்டு இருக்கு.
    ஆட்டுக்கல் ,அம்மி கூட தப்ப வில்லை. உலக்கையை மட்டும் தனியா வச்சுட்டேன். யாரும் எடுக்கக் கூடாதுன்னு.:0
    ம்ம் பாட்டிக்கு இப்ப எங்க போறது?
    இந்த்தப் பாட்டிக்கு அந்த அதிர்ஷ்டம் இன்னும் கிடைக்கலை.

    ReplyDelete
  26. வாங்க ஜெயஸ்ரீ, நல்லெண்ணை விட்டுச் சின்ன வெங்காயமும், உப்புக்கல்லும் சேர்த்து........ அதிலும் வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் அம்மியிலே வைச்சு ஒரு தட்டுத் தட்டிட்டுப் போடுவாங்க! :))))))

    ReplyDelete
  27. @திவா, டிசம்பர் பதினைந்து தேதிக்குள்ளாகப் பெளர்ணமி வந்தால் மொட்டை மாடியிலே நிலாக் காயுதேனு பாடிண்டு சாப்பிடலாம். ஜாலியாத் தான் இருக்கும், எனக்கு அது ஒண்ணும் குளிரே இல்லை! பிசாத்துக் குளிர். வேர்த்துக்கொட்டும் அப்போவும்! :)))))

    ReplyDelete
  28. வாங்க கபீரன்பன், தேடிப் பிடிச்சு வந்ததுக்கு நன்றி. இப்போவும் குமுட்டியிலே கரி போட்டுச் சமைக்கும்போது அப்பளம் சுடுவது உண்டு. என்னதான் மைக்ரோவேவ் இருந்தாலும் சுட்ட அப்பளத்தின் ருசி, அதிலும், அதிலே கொஞ்சம் நெய் விட்டுச் சாப்பிட்டால்!! :)))))

    நீங்க சொல்றாப்போல் காபிக்கொட்டையை 96 வரைக்கும் வீட்டிலேயே வறுத்து , கையிலே காப்பிக்கொட்டை மிஷினிலேயே அரைச்சுத் தான் காபி போட்டிருக்கேன். மிஷின் கூட இன்னமும் மேலே பரணில் இருக்குனு நினைக்கிறேன். அதுக்கு அப்புறம் தான் புகை கூடாது, சமையல் கூடாதுனு மருத்துவர்கள் தடா போட்டதும் நிறுத்தியாச்சு! வேறே யாரும் அரைக்க விடறதில்லை. நானே தான் அரைச்சுப்பேன்! :) நான் இல்லைனாலும் மத்தவங்க அரைக்கிறச்சே பொடி சரியா வரலைனு எல்லாரும் சொல்லிட்டு இருப்பாங்க. :)பாலும் எங்க வீட்டிலே அப்போ அப்போக் கறந்த புத்தம்புதுப்பால்! இப்போப்பால் என்னமோ புதுப்பால் தான். ஆனால் பொடி வாங்கித் தான் காபி! :))))))

    ReplyDelete
  29. மறு வரவுக்கு நன்றி ஜெயஸ்ரீ, இங்கே ஒண்ணும் அவ்வ்வ்வ்வ்வ்வளவு குளிரெல்லாம் கிடையாது. :)))))) சென்னையிலே இதம்ம்மா இருக்கும் ஒரே மாசம் டிசம்பர் தான். மற்றப்பதினொரு மாதங்களும் வெயிலோ வெயில், சூடு. இப்போவே சூடு தாங்கலை! :(

    ReplyDelete
  30. வாங்க வல்லி, ரொம்ப நாட்கள் கழிச்சுக் கல்சட்டி உங்களை இங்கே இழுத்துண்டு வந்திருக்கு. எங்க வீட்டிலே இன்னமும் உலக்கைப் பிரயோகமும் உண்டு! :))) பயந்துக்காதீங்கப்பா! உரல், உலக்கையைச் சொன்னேன்! :)))))
    அம்மி ஒன்று சமையலறையிலேயே போட்டிருக்கேன். ஆற்காட்டாரை நம்ப முடியாதே! அதே போல் ஆட்டுக்கல்லும் ஒண்ணு கொல்லை வெராந்தாவிலே அவசரத்துக்குக் கை கொடுக்கப் போட்டிருக்கு! :))))) எல்லாமும் படம் எடுத்துப் போட்டுடலாம்னு பார்க்கிறேன். இந்தத் தலைமுறைக்கு என்னனு புரியுமே! :))))))))

    ReplyDelete
  31. கல்சட்டியில் சமைக்க முடியுமா? அதைச் சூடாக்க ரொம்ப நேரம் ஆகுமே? கேஸ் விக்கிற விலையில.. :-((( என்னவெல்லாம் சமைப்பீங்க அதில? மண்சட்டி இப்பவும் பயன்படுத்துறேன் நான் (நான் யூத்துதான்; இன்னும் பாட்டியாகலை ;-)))))) ). ஆனா, கல்சட்டி இப்பத்தான் கேள்விப்படுறேன்!!

    ReplyDelete
  32. ஹுசைனம்மா, நல்ல கேள்வி. சூடாக்குவதற்கு குக்கரில் எத்தனை நேரம் பிடிக்குமோ அதைவிடக் குறைவாகவே கல்சட்டிக்குப்பிடிக்கும். அதோடு சமைத்த பின்னர் குறைந்த பக்ஷமாய் மூன்று மணி நேரத்துக்கு சூடும் ஆறாது. காசரோலில், மற்றும் சூடாக வைக்கும் இந்தக் காலத்து நவீனப் பாத்திரங்கள் எல்லாம் இதன் கிட்டே கூட வர முடியாது. அதைப் போலவே குளிர்ச்சியையும் தக்க வைத்துக்கொள்ளும். சாதத்தை நீர் ஊற்றி இரவு வைத்துவிட்டால் காலை என்ன குளிர்ச்சியாக இருக்கும் தெரியுமா? குளிர்சாதனப் பெட்டியில் ஜில்லிப்பு கிடையாது. இது தண்மையான இதமான குளிர்ச்சியாக இருக்கும். கல்சட்டியில் சமைக்க முடியுமானு நீங்க கேட்பதில் இருந்து பார்த்ததில்லைனு புரியுது. அடியில் எண்ணெய் ஊற்றித் தாளித்து வற்றல் குழம்பு செய்யலாம். தங்கமணி அம்மா கூறி இருப்பது போல் கல்சட்டியிலேயே வாணலி போன்ற அமைப்பில் எண்ணெய் வைத்து பட்சணங்கள், பலகாரங்கள் செய்யலாம். :)))))))))

    ReplyDelete
  33. கல் சட்டி நானும் இன்றுதான் பார்க்கிறேன். நன்றி.

    ஈயச்சட்டி,செம்பு முன்பிருந்தது தெரியும்.

    மண்சட்டியில் சமைப்பேன்.

    ReplyDelete
  34. கல்சட்டி... பாததுமில்ல கேட்டதுமில்ல... தேங்க்ஸ் மாமி... ஓல்ட் இஸ் கோல்ட் தான்... :)))

    ReplyDelete
  35. எங்க வீட்டு கல்சட்டிய நினைவுபடுத்திட்டீங்க கீதாம்மா. ஆச்சி, உபயோகப்படுத்திய கல்சட்டியொண்ணு எங்க கிட்ட இருந்தது. அம்மா அதில் ஊறுகாய் போட்டு வைத்த ஞாபகம். சிலசமயங்களில் கீரையை அதுல போட்டு மசிக்கிறதும் உண்டு..

    ReplyDelete
  36. வாங்க மாதேவி, ஈயச் செம்பு இப்போவும் என்னிடம் இருக்கு. ரசம் தினமும் அதிலே தான். :)

    வாங்க ஏடிஎம், பார்க்கலைங்கறது ஆச்சரியமா இருக்கு!

    அமைதி, ஆமாம் ஊறுகாய் போடலாம். மாவடுவை என்னோட பாட்டி இதிலே போடுவாங்க. அப்புறம் மாங்காய்களைத் துண்டம் துண்டமா நறுக்கிட்டு வெறும் உப்பு, மிளகாய்த் தூள் போட்டுக் கடுகு, பெருங்காயம் தாளிப்பதை இதிலே போட்டுட்டு தினமும் வெய்யிலில் வைப்பாங்க, கல்சட்டியோட வாயிலே துணியைக் கட்டிட்டு வைப்பாங்க. அந்த ஊறுகாயே ஒரு ஆறு மாசத்துக்குக் குறையாமல் வீணாகாமல் இருக்கும். கடைசியிலே மாங்காய் குழைந்து போய்க் காரத்தோடு சேர்ந்து இருக்கிறதுக்கு நாங்க எல்லாம் உனக்கு, எனக்குனு அடிச்சுப்போம்! :)))))))) இப்போ ஊறுகாய்னா என்னனு கேட்கிறேன். :D

    ReplyDelete
  37. இப்பவும் மண்சட்டியில் கீரை,ஆப்பம் செய்கிறோம்.அருமையாய் வரும்.அடிக்கடி கைத்தவறி உடைத்து விடுவோம்.

    ReplyDelete
  38. கல்சட்டி இப்போதான் தெரிந்தது..அருமையானதொரு பகிர்விற்கு நன்றி...செம்புப்பானையில் நீர் ஊற்றிவைத்துக் குடிக்கலாமா? நல்லதுதானே? நன்றி!

    ReplyDelete
  39. @Amudha Krishna,

    Thanks. :) sorry for the late answer.

    Thenmadura Thamiz Grace, thanks for coming. Add some tulsi leaves in the water and drink it. good for health. :)))

    ReplyDelete
  40. அஆவ் கீதாக்கா ..மா கல் சட்டி னு கூகிள் கிட்ட கேட்டதும் இங்கே டைரக்ஸன் காமிச்சு :) 2011 லருந்தா வச்சிருக்கீங்க வாவ் .
    இங்கே இப்படி கிடைக்க சான்ஸ் இல்லை ஆனா ஸ்டோன் வேர்னு விக்கிறாங்க பாப்போம் கிடைச்ச வாங்கணும் :)

    ReplyDelete
    Replies
    1. ஏஞ்சல், ஹாஹாஹா, நம்ம கல்சட்டி மட்டுமில்லை, நம்ம பெயரும் கூகிளாருக்கு ரொம்பப் பழக்கம்! :)))))

      Delete