எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, August 22, 2017

மறுபடியும் படம் காட்டறேனே!டெக்சாஸ் மாநிலம் சான் அன்டானியோ நகருக்குச் சுற்றுலா சென்றிருந்த போது அங்கே பார்த்த காவெர்ன் கேவ்ஸ் எனப்படும் சுண்ணாம்புப் பாறைகளால் ஆன கிட்டத்தட்ட 200 அடி ஆழத்திலுள்ள குகைப் பாதையில் இன்னமும் பச்சை இருப்பதைக் காணலாம். ஏற்கெனவே போட்டிருக்கேன்.
குகைக்குள் கீழிறங்கும் வழி!இந்தக்குறுகலான வழியிலும் போக வேண்டும். நாம் எல்லோரும் வந்துட்டோமானு சோதிக்க உள்ளே உள்ள மைக்கில் வழிகாட்டி குரல் கொடுப்பார்.
குகைப்பாதை! முழுக்க முழுக்க குகைப் பாதையிலேயே செல்ல வேண்டும். டெனிசி மாநிலத்திலும் மெம்பிஸுக்கு அருகே இதே போன்ற ஓர் குகைப்பாதையில் சென்று தான் ரூபி ஃபால்ஸ் என்னும் பிரபலமான சுரங்கத்தில் இருக்கும் ஓர் அருவியைப் பார்த்தோம். அப்போல்லாம் காமிரா இல்லை!சான் அன்டானியோ நகரில் நாங்கள் தங்கி இருந்த ஓட்டல் இருந்த தெரு. ஒரு பார்வை! இம்மாதிரி இரண்டு, மூன்று குதிரை வண்டிகள் இருக்கின்றன. விரும்பினால் அதில் நகரைச் சுற்றி வரலாம். நமக்குப் புதுசு இல்லை என்பதால் நாங்க போகலை!Sunday, August 20, 2017

புலிகளைப் பார்த்து சூடு வைத்துக் கொண்ட பூனை!2011 ஆம் ஆண்டு அம்பேரிக்கா போயிருந்தப்போ சுற்றிப் பார்த்த இடங்களில் இந்தப் பறவைகள் சரணாலயமும் ஒன்று.  கீழே காண்பது சான் அன்டானியோ என்னும் இடத்தில் உள்ள ரிவர் வாக் சென்று தங்கி இருந்தப்போ அங்கே இருந்த "ஸீ வேர்ல்ட்" என்னும் பிரம்மாண்டமான பூங்காவின் ஒரு சிறு காட்சி! நிறையப் படங்கள் இருந்தாலும் தேர்ந்தெடுத்தே போட்டிருக்கேன். இவற்றை முன்னாடியே பார்த்திருக்கலாம்.
"ஸீ வேர்ல்ட்"நுழைவாயில் கீழே! அப்போது கிறிஸ்துமஸ் காலம் என்பதால் எங்கும் வண்ணமயமான அலங்காரங்கள்!
அங்கு காணப்பட்ட வித விதமான கிறிஸ்துமஸ் மரங்கள்!
இது ஒரு தீம் பார்க் மாதிரி! பல்வேறு விதமான விளையாட்டுக்களும் உண்டு! நாங்க குறிப்பிட்ட சிலவற்றுக்கு மட்டுமே போனோம். இவை எல்லாம் காமிராவில் எடுத்தவை. காமிராவை வெளியே எடுத்து சார்ஜ் செய்து வைச்சுக்கணும்! மொபைலில் பல சமயங்களிலும் சரியா வரதில்லை. எல்லாம் நொ.கு.ச.சா. ஆகி விடுகிறது.

Saturday, August 19, 2017

காவிரி புஷ்கரம் என்றால் என்ன?

காவிரி புஷ்கரம் பற்றிப் பலருக்கும் பல சந்தேகங்கள். தம்பி வாசுதேவன் இதோ இங்கே போட்டிருக்கார்.
காவிரி புஷ்கரம்

இது புண்ணிய நதி தீர்த்தங்களில் ஒவ்வொரு நதி தீரத்திலும் ஒவ்வொரு மாதம் கொண்டாடப் படும். இதற்குப் பலரும் பல கதைகள், புராணங்களை மேற்கோள் காட்டுகின்றார்கள். முக்கியமாய்ச் சொல்வது என்னவென்றால்:-

ராஜஸ்தானின் அஜ்மேர் நகருக்கு அருகே புஷ்கர் என்னும் ஊர் ஒன்று இருக்கிறது. இந்தியாவிலேயே பிரம்மாவுக்குக் கோயில் அதுவும் தனிக் கோயில் அமைத்து வழிபடுவது அங்கே மட்டும் தான். தமிழ்நாட்டில் ஒரு சில கோயில்களில் பிரம்மாவுக்கும் வழிபாடு இருந்தாலும் பெரும்பாலும் கோஷ்டத்திலேயே பிரம்மா காணப்படுவார். ஆனால் இந்தப் புஷ்கரத்தில் மூலஸ்தானத்திலேயே பிரம்மா தான்.  இந்தப் புஷ்கர் நகரில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் பெரிய திருவிழா நடைபெறும்.   இந்தப் புஷ்கர் நகரில் பிரம்மாண்டமான ஓர் ஏரி உண்டு. இதை சர்வ தீர்த்தங்களுக்கும் ராஜாவான புஷ்கரர் என அழைப்பார்கள். இந்தப் புஷ்கரர் பிரம்மாவின் கமண்டலத்தில் இருந்தாராம். உலகில் உள்ள மூன்றரைக் கோடி தீர்த்தங்களுக்கும் இவரே அதிபதி எனப்படுவார்.

அப்போது பிரஹஸ்பதி என அழைக்கப்படும் குரு பகவான் பிரம்மாவிடம் தனக்கு சர்வக்ஞத்துவமும், கிரஹங்களின் அதிபதியாக இருக்கவேண்டும் எனவும் அனைவராலும் தான் துதிக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். அதோடு பிரம்மாவின் கமண்டலத்தில் இருந்த புஷ்கரரைத் தம்மிடம் தருமாறும் கேட்டுக் கொண்டார். ஆனால் புஷ்கரரோ பிரஹஸ்பதியிடம் போக மறுத்தார். ஆனால் பிரம்மா, தான் வரம் அளித்து விட்டதால் அதிலிருந்து தம்மால் மீற முடியாது என்பதால் பிரஹஸ்பதியிடம் குறிப்பிட்ட காலம் அவர் இருந்தே தீர வேண்டும் என்றார். அதன் படி குரு பகவான் ஒவ்வொரு மாதமும் எந்த ராசியில் பிரவேசிக்கிறாரோ அதன் முதல் பனிரண்டு நாட்கள், கடைசி பனிரண்டு நாட்கள், இடைப்பட்ட நாட்கள் மத்தியான காலங்களில் புஷ்கரர் பிருஹஸ்பதியிடம் இருக்கிறார். குரு பகவான் ஒவ்வொரு ராசியில் பிரவேசிக்கும்போதும் அவருக்கு ஒவ்வொரு நதியிடம் சம்பந்தம் உண்டாவதாக ஐதீகம்.

அதன்படி மேஷ ராசிக்கு குரு செல்லும்போது கங்கா புஷ்கரம், ஹரித்வார், காசி, ரிஷிகேஷ் ஆகிய ஊர்களிலும் மற்றும் கங்கைக்கரையோரம் உள்ள புண்ணிய ஸ்தலங்களிலும் நடைபெறும். ரிஷப ராசியில் குரு பிரவேசிக்கையில் நர்மதா புஷ்கரம் மத்தியப் பிரதேசத்தில் உள்ள நர்மதா நதி தீரங்களில் குறிப்பாக ஓங்காரேஸ்வரர் குடியிருக்கும் ஓங்காரேஸ்வரத் தலத்தில் சிறப்பாக நடைபெறும். மிதுன ராசிக்கு சரஸ்வதி புஷ்கரம். இது  குருக்ஷேத்திரம், கேசவ பிரயாகை, குஜராத் சோம்நாத், அலஹாபாத் திரிவேணி சங்கமம், ஆந்திரா காளேஸ்வரம், மத்திய பிரதேசம் பேடாகட் என்னும் இடத்திலும் நடைபெறும்.

குரு பகவான் கடக ராசியில் நுழையும்போது யமுனா நதி தீரங்களான யமுனோத்ரி, ஹரித்வார், ப்ருந்தாவன், மத்ரா, திரிவேணி சங்கமம் ஆகிய இடங்களிலும், குரு பகவான் சிம்ம ராசியைக் கடக்கும்போது கோதாவரி நதி தீரங்களான நாசிக் அருகே உள்ள திரியம்பகம், ஆந்திராவில் உள்ள கோதாவரி நதி தீரங்கள் ஆகிய இடங்களில் கோதாவரி புஷ்கரம் நடைபெறும். குரு பகவான் கன்னி ராசியில் நுழைகையில் கிருஷ்ணா நதி தீரங்களில்  துளசி, காசரி, போகவதி, கும்பி, சாவித்ரி ஆகிய ஐந்து நதிகள் கூடும் பஞ்ச நதி க்ஷேத்திரங்களில் உள்ள பிரயாக் சங்கமம், ஆந்திராவில் உள்ள விஜயவாடாவில் கிருஷ்ணா புஷ்கரம் நடைபெறும். குரு பகவான் துலா ராசிக்குள் நுழைகையில் காவிரி புஷ்கரம் காவிரி நதி தீரங்களில் முக்கியமாய்த் தலைக்காவிரி, ஶ்ரீரங்கப்பட்டினம், ஶ்ரீரங்கம், மயிலாடுதுறை ஆகிய ஊர்களில் சிறப்பாக நடைபெறும்.

குரு பகவான் விருச்சிக ராசியில் நுழைகையில் பண்டர்பூர் அருகிலுள்ள பீமா நதியில் பீம புஷ்கரம் எனவும், அதுவே தாமிரபரணி நதிக்கரையில் தாமிரபரணி புஷ்கரம் எனவும் கொண்டாடப் படுகிறது. இது தாமிரபரணி நதிக்கரை ஸ்தலங்கள் ஆன, பாபநாசம், பாண தீர்த்தம், திருநெல்வேலி அருகிலுள்ள சிந்துபூந்துறை ஆகிய இடங்களில் சிறப்பாக நடைபெறும். குரு பகவான் தநுர் ராசியில் நுழைகையில் பிரம்மாபுத்திரா நதி தீரங்களில் நடைபெறும் அஸ்ஸாமில் உள்ள பிரம்மபுத்திரா நதிக்கரையோர ஸ்தலங்களில் சிறப்பாக நடைபெறும்.  குரு பகவான் மகர ராசியில் நுழைகையில் துங்கபத்ரா நதி தீரங்களான  சிருங்கேரி, மந்திராலயம் ஆகிய ஊர்களிலும், குரு பகவான் கும்ப ராசியில் பிரவேசிக்கையில்  சிந்து நதி தீரங்களான ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் ஆகிய இடங்களில் சிந்து புஷ்கரமாக நடைபெறும். குரு பகவான் மீன ராசியில் பிரவேசிக்கையில் ப்ராணஹிதா புஷ்கரம் என்னும் பெயரில் தெலங்கானாவில் உள்ள அடிலாபாத்தில் காலேஸ்வரம் உள்ளிட்ட பனிரண்டு நதி தீரங்களில் கொண்டாடப்படும்

இவ்வருடம் காவிரி புஷ்கரம் சுமார் 144 ஆண்டுகளுக்குப்பின்னர் வரும் சிறப்பான புஷ்கரம் ஆகும். இது செப்டெம்பர் 12-9-17 இல் இருந்து 24-9-17 வரை காவிரி நதி தீரங்களில் நடைபெற உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளும் பெண்கள் வடிவில் இந்தக் காவிரி நதியில் வந்து நீராடித் தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்வதாக ஐதிகம். இது ஒவ்வொரு வருடமும் துலா மாசம் எனப்படும் ஐப்பசி மாதம் நடைபெறும். ஒவ்வொரு வருடமும் துலா மாதம் எனப்படு ஐப்பசி மாதத்தில் காவிரி நதியில் நீராடுவதைப் புனிதமாகக் கருதுவார்கள். இந்த வருடம் புஷ்கரமும் சேர்ந்து கொண்டதால் இது மிகுந்த  முக்கியத்துவம் பெறுகிறது.


காவிரியில் இன்னும் நீர் வரத்து இருக்கலாம் என எதிர்பார்க்கிறேன். வரத்து அதிகம் ஆனால் படங்கள் எடுக்கணும். இப்போதைக்கு இது மட்டும்.

Tuesday, August 15, 2017

எல்லோருக்கும் சுதந்திர தின, ஜன்மாஷ்டமி வாழ்த்துகள்!

முதல்லே ஜன்மாஷ்டமி வாழ்த்துகள். நேத்திக்கு ஜன்மாஷ்டமி பெரும்பாலானவர்களால் கொண்டாடப் பட்டது. வைணவர்களுக்கு அடுத்த மாதம் வருகிறது. இங்கே ஶ்ரீரங்கம் கோயிலிலும் அடுத்த மாதம் தான்! இந்த வருஷம் நம்ம வீட்டில் பண்டிகை இல்லை! அதனால் கிருஷ்ணன் பிறப்பைக் கொண்டாடாமல் இருக்க முடியுமோ? பக்ஷணம் தான் பண்ணக் கூடாது! கோலம் போட்டுக் கிருஷ்ணன் பாதங்களைப் பதிக்க முடியாது! எனக்கு இதான் ரொம்பவே வருத்தம். கிருஷ்ணன் பாதங்கள் சின்னச் சின்னப் பாதங்கள் போடுவதில் சின்ன வயசிலிருந்தே ரொம்ப ஆசை!

நம்ம ராமர், படங்களில் ஒரே பிரதிபலிப்பு அதிகம். விளக்கை அணைச்சுட்டு எடுத்தாலும் சரியா வரலை! கொஞ்சம் புகை மூட்டம் போலத் தெரியுது! தெளிவா இல்லை! :( காமிராவை எடுத்துச் சரி பண்ணி வைச்சுக்கணும். அலைபேசியில் எனக்குச் சரியா வரலை! (யாருங்க அங்கே, காமிராவில் என்ன வாழ்ந்ததுனு கேட்டு ஸ்கையை வாங்கறது?) 

மேலாவணி மூல வீதி வீட்டில்,மதுரையில் இருந்தப்போ அந்த நீளமான வீடு முழுக்க என் கைவண்ணத்தில் தான் கோலம் மிளிரும். கிருஷ்ணர் பாதங்களும் நான் போடுபவை தான். அந்த வீட்டில் நாலு குடித்தனம் இருந்தது. எல்லோருமே என்னுடைய கோலத்தை அங்கீகரிச்சிருக்காங்க. ம்ம்ம்ம். இந்த வருஷம் போட முடியலை! :( ஆனால் குழந்தை பிறப்பைக் கொண்டாட வேண்டாமோ! எப்படியும் தினம் தினம் காலையிலும் மாலையிலும் பால் நிவேதனம் செய்யறேன். மத்தியானம் சாதம்! ஆகவே நிவேதனம் செய்யறதை யாரும் தப்புனு சொல்ல முடியாதே!மல்லிகைப்பூக்களால் கிருஷ்ணர் முகம் மறைந்துள்ளது.

உடனடியாகத் தீர்மானம் போடப்பட்டு நிறைவேற்றப்பட்டது. முந்தாநாளே ரங்க்ஸ் பூக்கடைக்குப் போய்த் துளசி, உதிரி மல்லிகைப் பூ, கதம்பம் போன்றவற்றோடு பழங்களும் வாங்கி வந்துட்டார். பூவைத் தொடுத்து வைச்சுட்டேன். நேற்று மாலை விளக்கேற்றினதும் அப்போத் தான் வாங்கிய பால், காலை உறை ஊற்றி வைத்திருந்த தயிர், வெண்ணெய், அவல், வெல்லம், பழங்கள் எல்லாவற்றையும் கிருஷ்ணருக்கு நிவேதனம் செய்தேன். எல்லா வீட்டிலேயும் முறுக்கும், தட்டையும் சீடையும் சாப்பிட்டக் கிருஷ்ணருக்குக் கொஞ்சமானும் ஜீரணம் ஆகவேண்டாமோ! குழந்தை ஆச்சே! அதனால் எளிமையான நிவேதனம்! அவலைக் கூட மஹாராஷ்டிர முறைப்படித் தயிரில் போட்டு வைக்கலாமானு யோசிச்சேன். ரங்க்ஸுக்குப் பிடிக்கணும். அதோடு காலை வடிச்ச சாதம் வேறே மிச்சம் இருந்தது. அவலைத் தயிரில் போட்டால் சாதம் செலவாகாது. மறுநாள் பழைய சாதம் சாப்பிட முடியாது! ஆகவே அந்த எண்ணத்தைக் கைவிட்டேன்.


கீழ்த்தட்டில் உள்ள விக்ரஹங்கள்!  நடுவில் பெருமாள், ஶ்ரீதேவி, பூதேவி சமேதராக! குடும்பப் பரம்பரை விக்ரஹங்கள். இந்த விக்ரஹங்கள் பத்தித் தான் நம்ம தம்பி மோகனின் "அங்கிங்கெனாதபடி" கதையில் குறிப்பிட்டேன். மேலே பார்க்கும் கிருஷ்ணரும் இவங்களோடு சேர்ந்தவரே!


 நான் செய்த நிவேதனம், பால், தயிர், வெண்ணெய், பழங்கள், வெற்றிலை, பாக்கு, அவல், வெல்லம்.

தேங்காய் உடைத்துக் கற்பூரம் காட்டிச் செய்யவில்லை. வழக்கமான ஸ்லோகங்கள் தான்! எப்படியோ கிருஷ்ணர் எங்க வீட்டுக்கும் நேத்து வந்துட்டாரே!


தேசியக் கொடி க்கான பட முடிவு

தேசியக் கொடி! படத்துக்கு நன்றி கூகிளார் வாயிலாக தினமலர்!

இந்த எழுபதாவது சுதந்திர தினத்தில் நாடு முன்னேற அரசோடு சேர்ந்து நாமும் ஒத்துழைக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொள்வோம். எல்லாத் துறைகளிலும் நாடு தன்னிறைவு பெற்று முன்னேறப் பிரார்த்திப்போம்.

வந்தேமாதரம்!

ஜெய்ஹிந்த்!

Monday, August 14, 2017

நம்பெருமாளைப் பார்த்தேனா இல்லையா?

அதுக்குள்ளே கூட்டம் ஜாஸ்தி ஆகிப் பின்னால் இருந்து சாரி சாரியாக மக்கள் வந்து கொண்டே இருக்க எங்களால் முன்னாலும் செல்ல முடியாமல், பின்னாலும் செல்ல முடியாமல் நடுவில் மாட்டிக் கொண்டோம். இப்போப் பார்த்து அந்த வீல் சேர்காரர் பெண்ணை அழைத்துக் கொண்டு வெளியேற முயல என் புடைவை வீல் சேரில் மாட்டிக் கொள்ள திடீரென ஏற்பட்ட இறுக்கத்தினால் நான் உடனே என்னவென்று பார்க்க, புடைவையை விடுவித்துக் கொண்டேன்! கூட்டத்தின் நடுவில் இப்போ நான் இருக்க முன்னாலும், பின்னாலும் நெரித்துத் தள்ள வேர்த்து விறுவிறுத்துக் கிட்டத்தட்ட மயக்கம் வரும் நிலைக்குத் தள்ளப்பட முன்னொரு சமயம் மீனாக்ஷியை தரிசிக்கையில் (அப்போப் பையர் கூட இருந்தார், வெளியேற்றி விட்டார்.) ஏற்பட்ட நிலைமை இப்போதும் ஏற்படும் போல் இருந்தது.

அதைப் பார்த்துவிட்ட ரங்க்ஸ் உடனே தள்ளுமுள்ளு செய்து என்னருகே வர, நான் வெளியேறிவிடலாம் என்று சொன்னேன். சரினு வெளியேற முயற்சித்தால் வெளியே செல்லும் வழியிலும் ஆட்கள் உள்ளே வருகின்றனர்! என்னத்தைச் செய்யறது! ரொம்பக் கஷ்டப்பட்டு மேடையிலிருந்து கீழே இறங்கினோம். கொஞ்சம் இடைவெளி கிடைத்தது! அப்பாடா! மூச்சு விட்டுக் கொண்டேன். இருக்கலாமா, போகலாமானு ரங்க்ஸ் கேட்க அரை மனதாகப் போயிடலாம்னு சொன்னேன். மறுபடி சுத்தித் தான் போகணும். இம்முறைப் படிகள் ஏறணும்! ஒவ்வொரு படியும் சுமார் ஒரு அடி உயரத்தில் போட்டிருக்காங்க! இறங்கும்போதே சிரமம். ஏறும்போது காலைத் தூக்கி வைக்கணுமே! ஆனால் முக்கிய வாயில் வழி செல்ல முடியாமல் கூட்டம் இன்னமும் அடைத்துக் கொண்டு நிற்கிறதே! ஆகவே சுத்திக் கொண்டு காவிரிக்கரைக்கு வந்தோம். கொஞ்சம் காற்றும் வந்தது. செருப்பைப் போட்டுக் கொண்டு படிகளில் ஏறலாமானு யோசிச்சோம். அதுக்குள்ளே காவிரியைப் படம் எடுக்கலாம்னு கொஞ்சம் கிட்டேப் போய் எடுத்தேன். இன்னும் கிட்டேப் போய் எடுக்கணும்னா மறுபடி 20 படிகள்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்அப்போப் பார்த்து நம்ம ஆண்டாளம்மா ரங்கநாதர் கொடுக்கும் சீர் வரிசைகளை வாங்க வேண்டி மண்டபத்துக்குள்ளே நுழைஞ்சாங்க!  அது வரை எங்கே இருந்தாங்கன்னே தெரியலை. முதல்லேயே  கவனிச்சிருந்தா கிட்டே இருந்து எடுத்திருக்கலாம். தெரியலை! ஆகவே அவசரம் அவசரமா ஒரு க்ளிக்!


அம்மாமண்டபத்தைச் சுற்றியுள்ள ஓர் பகுதி!


மண்டபத்துக்குள்ளே ஆண்டாளம்மா போறாங்களேனு படம் எடுத்தால் உள்ளே இருந்த இருட்டில் ஆண்டாளம்மா தெரியலை! :( கிட்டே போக முடியலை. அதுக்குள்ளே உள்ளே போயிட்டாங்க! உள்ளே நெரிசல்!  அப்புறமாப் படிகளில் ஏறி இறங்கி தெருவுக்கு முக்கிய வாயில் அருகே வந்துட்டோம். அதை இப்போத் திறந்திருந்தாங்க. மக்கள் அதன் வழியாகவும் உள்ளே போய் வந்து கொண்டிருந்தனர். என் முகத்தைப் பார்த்துச் சகிக்காமலோ என்னமோ ரங்க்ஸ் என்னைப் பார்த்து, "நான் பார்த்துட்டேன். நீ இந்த வழியாப் போய்ப் பார்த்துட்டு வா! நான் இங்கேயே நிற்கிறேன். என்றார். கொஞ்சம் யோசிச்ச நான், அப்புறமா வரலாமானும் ஒரு எண்ணம் இருந்தது. ஆனால் இப்போவே போயிடலாம்னு சரினு சொல்லிட்டு அந்த வழியே செல்ல முயன்றேன். செல்லைக் கொடு, இப்போ இந்தக் கூட்டத்தில் படம் எடுக்க முயன்றால் கீழே தள்ளிடுவாங்க! அல்லது செல்லே போயிடும்னு சொல்லிட்டு வாங்கி வைச்சுண்டார். அதுவும் சரிதான்னு செல்லைக் கொடுத்துட்டு முக்கிய வாயில் வழியே சென்றேன்.

கொஞ்ச தூரத்திலேயே வீல் சேர் காரர் தன் பெண்ணை உள்ளே சுவாமிக்கு அருகே கொண்டு காட்டும்படி பட்டாசாரியாரிடம் சொல்லி உள்ளே அனுப்பி இருந்தார். கோவில் சேவகர்கள் அந்தப் பெண்ணுக்கு தரிசனம் செய்து வைத்துக் கொண்டு இருந்தனர். நானும் போனேன். முதல்லே பக்கவாட்டில் இருந்து தான் பார்க்க முடிந்தது. நடுவில் போய் நின்று பார்க்கலாம் என மெல்ல மெல்ல சுவாமிக்கு எதிரே போனேன். கொஞ்சம் கூட்டம் தான் என்றாலும் நிற்க இடம் கிடைத்தது. சரினு ரொம்ப நாள் காத்திருந்து கிடைத்த அருமையான தரிசனத்தைக் கண்ணாரக் கண்டு விட்டு இன்னிக்கு நம்பெருமாள் பாண்டியன் கொண்டையில் வரலை; புதுசாக் கிரீடம், அதோடு எப்போதும் இருக்கும் நீலக்கல் மாலையும் இல்லை! பெரிய பதக்கம் வைத்த சங்கிலி என்பதும் மனதில் பதிந்தது. 

எந்த அலங்காரமும் எந்த நகையும் அவருக்கு நன்றாகவே இருக்கும்; இருக்கிறது. இப்படி எல்லாம் கஷ்டப்பட வைக்கிறியே ரங்குனு மனசுக்குள்ளே கேட்டுட்டுத் திரும்ப வெளியே வந்து வீடு வந்து சேர்ந்தோம்.  காவிரியில் கொஞ்சமாகத் தண்ணீர் திறந்திருக்காங்க! அதுவும் நேற்று ரங்கநாதர் காவிரிக்கரைக்கு வரப் போவது நிச்சயம் ஆனப்புறம் தான் அம்மாமண்டபம் படித்துறைக்கே வந்து சேர்ந்தது. இன்னிக்குக் காலம்பர மொட்டை மாடிக்குப் போய்க் காவிரி ஆற்றைச் சில படங்கள் எடுத்தேன். கொஞ்சம் மோடமாக இருந்தது. சரியாக விடியவில்லை! ஆகவே படம் வந்தவரைக்கும் தான்! தொ.நு.நி. நோ குற்றம், குறை! ஓகேயா?

Sunday, August 13, 2017

ரங்குவைத் தான் பார்க்க முடியாதுன்னா நம்பெருமாளையுமா?

இந்த வருஷம் சித்ரா பௌர்ணமிக்கு யு.எஸ்ஸில் சேச்சே, அம்பேரிக்காவில் இருந்ததால் நம்பெருமாள் காவிரிக்கரைக்கு வந்தப்போப் பார்க்க முடியலை! சரி, ஆடி மாதம் பார்த்துக்கலாம்னு இருந்தோம். நாங்க வரதுக்குள்ளே எல்லாத் திருவிழாவும் முடிஞ்சாச்சு! கோயிலுக்கு ஒரு வருஷத்துக்குப் போக முடியாது! ஆகம முறைப்படி கொடிமரமும் உள்ள கோயில்! ஆகவே கொஞ்சம் கஷ்டமாத் தான் இருந்தது.

ஆனால் ஆடிப் பதினெட்டுக்கு நம்பெருமாள் வரலை! இரண்டு காரணம். ஒண்ணு காவிரியம்மாவுக்கு மனமும் வறண்டு போச்சோனு நினைக்கும் அளவுக்குத் தண்ணீர்ப் பற்றாக்குறை! இன்னும் கொஞ்ச வருஷம் போனால் மறைந்த நதிகள் வரிசையில் காவிரியும் இடம் பெறலாம்! :( என்னத்தைச் சொல்ல!

 இரண்டாவது காரணம் பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேஹம் என்னும் தைலக்காப்பும், திருமஞ்சனமும் ஆகி 45 நாட்கள் கூட ஆகவில்லையாம். அதற்குள்ளாக நம்பெருமாள் வெளியே வர மாட்டார்! வெயில் வேறேயே!  ஆகவே ஆடி 28 ஆம் தேதி தான் பெருமாள் வரதாகச் சொன்னாங்க. எப்படியும் நீர் இருந்தாலும் இல்லைனாலும் காவிரிக்குச் சீர் கொடுக்கணுமே! ஆகவே பெருமாள் வந்தே ஆக வேண்டும்.

ஆனால் இன்று காலை எழுந்ததில் இருந்தே தூற்றலாகப் போட்டுக் கொண்டே இருந்தது. கொஞ்சம் காற்றடித்தாலோ, இடி இடித்தாலோ, மின்னல் மின்னினாலோ வெளியே வந்த பெருமாள் விருட்டென உள்ளே போய் விடுவார். கையிலே குடை என்ன, சுற்றி அவரைப் படுதாவால் மூடும் வேகம் என்ன என நாம் கவனிக்கிறதுக்குள்ளே பெருமாளைத் தூக்கிக் கொண்டு ஓடியே போயிடுவாங்க!  ஆகவே இன்னிக்குப் பெருமாள் எங்கே வரப் போறார்னு நினைச்சேன். அதைச் சொல்லவும் செய்தேனா ரங்க்ஸுக்குக் கோபம். கீழே செக்யூரிடிக்குத் தொலைபேசி விசாரித்தார். அவரும் நான் சொன்னதையே உறுதி செய்தார்.

சரினு வழக்கமான வேலைகளைக் கவனிக்கையில் திடீர்னு அதிர்வேட்டுச் சப்தம். இங்கே அடிக்கடி வெடிச் சப்தம் கேட்டாலும் சுவாமி வரச்சே கேட்பது தனி! அது அதிர்வேட்டு என்று கண்டு பிடிக்கலாம். கூடவே நகராச் சப்தமும்.  ஆஹா, நம்பெருமாள் வரார்! உடனே கீழே விசாரித்தால் ஆமாம்னு சொன்னாங்க! சரினு அடுப்பில் வெந்து கொண்டிருந்த சாதத்தையும் புடலங்காய்க் கறியையும் அணைச்சுட்டுக் கீழே ஓடினேன். அங்கே பார்த்தால் எல்லோரும் நின்னுட்டு இருந்தாங்க.  ஏற்கெனவே மழை பெய்து கொண்டிருந்ததால் உபயதாரர்களை எல்லாம் கோயில் கோபுர வாசலுக்கு வரச் சொல்லி மரியாதை பண்ணிட்டாங்களாம். அதனால் எங்க குடியிருப்பு வளாகத்துக்குப் பக்கத்து வீட்டுக்கு நம்பெருமாள் போகவே இல்லை. அங்கே மட்டும் இல்லை. வழியில் எங்கேயும் மண்டகப்படி போகலை! நேரே அம்மாமண்டபம் போயிட்டாராம்! உடனே போய்ப் பார்க்கலாம்னா திரை போட்டிருப்பாங்களாம். சரி சாப்பிட்டுப் போகலாம்னு நினைச்சேன்.

சாப்பிட்டுக் கூப்பிட்டால் ரங்க்ஸுக்கு அலுப்பு! உண்ட மயக்கம்! இத்தனைக்கும் எளிமையான சாப்பாடு! சரினு எனக்குக் கொஞ்சம் வேலை ஏற்படுத்திக் கொண்டிருந்ததைக் கவனிக்கப் போயிட்டேன். மூணரை மணிக்கு ரங்க்ஸ் வந்து போகலாமானார். தேநீர் குடிச்சுட்டு வேணாப்போகலாம்னு சொன்னார். வெயில் கடுமையா இருந்ததால் தேநீர்  குடிச்சுட்டுப் போனால் வேர்க்கும் என வேண்டாம், போயிட்டு வந்து குடிக்கலாம்னு சொன்னேன். சரினு அம்மாமண்டபம் போனோம். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இப்போவும் திரை போட்டிருக்காங்க! முக்கிய வாசல் மூடி இருந்தது. சுத்திட்டுப் படிகள் வழியே கஷ்டப்பட்டு ஏறி, இறங்கிப் போனோம். மெல்ல மெல்ல மெல்லத் திரைக்குக் கிட்டேயே போயிட்டோம். அதுக்குள்ளே ஒருத்தர் சக்கரநாற்காலியில் தன் மனநிலை சரியில்லாப் பெண்ணோடு வந்தவர் என் காலில் சக்கரநாற்காலியை ஏற்றினார். வேதனையுடன் கத்த, அப்போது அங்கே வந்த ஒருத்தர் வீடியோ காமிராவை எடுத்துக் கொண்டு எனக்கு முன்னால் மறைக்க, நான் "நகருங்க"னு சொல்ல, "திரையே எடுக்கலைம்மா!" என்று அவர் சிரிக்கக் கொஞ்சம் சமாதானம் ஆனேன்.

அதுக்குள்ளே வேத பாடங்கள் சுவாமிக்குச் சொல்லிக் காட்டும் வேத பண்டிதர்கள் வர அவர்கள் எல்லோரும் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களைக் கூறி பகவானை வாழ்த்தினார்கள். அதர்வண வேதம் சொன்னவர் பெரும்பாலாகப் பெருமாளை வாழ்த்தியே பாடினார். சாமவேதம் பாடினவருக்குக் குரலே எழும்பவில்லை! இருந்தாலும் பரவாயில்லை! அதன் பின்னர் மீண்டும் திரைக்குள்ளே போய் வாத்தியங்கள் முழங்க உள்ளே ஆராதனை முடிந்து திரையைத் திறந்தால், பின்னாலே இருந்து எங்களை முன்னே தள்ள, முன்னே உள்ளவர்கள் பின்னே தள்ள இதற்கு நடுவில், அங்கே ஜேசி வந்திருக்கார் என மாலை, மரியாதைகள், விஐபி உபசாரம் என ஆரம்பிக்க எல்லாக் காமிராக்களும் கைக்கு மேல் கோவிந்தா போட்டுத் தூக்கிக்க சுத்தம்!

எனக்கு எதுவுமே தெரியலை. உயரமான நம்ம ரங்க்ஸோ எந்தக் கவலையுமில்லாமல் நம்பெருமாளைப் பார்த்தார்.இந்தப்படங்கள் 2015 ஆம் ஆண்டு மே மாதம் நாலாம் தேதி சித்ரா பௌர்ணமிக்கு நம்பெருமாள் எங்க குடியிருப்பு வளாகத்துக்குப் பக்கத்தில் உள்ள வீட்டுக்கு மண்டகப்படி வந்தப்போ எடுத்த படம். 

Friday, August 11, 2017

கலி முத்தி விட்டதா?

சமீபத்திய இரண்டு,மூன்று செய்திகள் மனதைக்  கலங்க அடித்து விட்டது. அதில் ஒன்று அமெரிக்காவில் வசிக்கும் மகன், மும்பையில் ஒரு குடியிருப்பு வளாகத்தில் வசித்து வந்த பெற்றோர். மகன் தொலைபேசியில் அவ்வப்போது பேசுவதோடு சரி!  தந்தை வயது மூப்பு, நோய் காரணமாக இறந்து விட்டார். மகன் வந்ததாகத் தெரியவில்லை. ஆனால் தாய் தனியே அதே வீட்டில் வசித்து வந்திருக்கிறார். சென்ற வருடம் மகன் தாயுடன் தொலைபேசியில் பேசி இருக்கிறார். அதன் பின்னர் ஒரு வருஷம் தாயுடன் பேசவே இல்லை. இப்போது இம்முறை விடுமுறைக்கு வந்தவர் தாயைப் பார்க்க வேண்டி வீட்டுக்கு வந்திருக்கிறார். கதவைத் தட்டத் தட்டத் திறக்கவே இல்லை.  பின்னர் அக்கம்பக்கம், போலீஸ் (ஏனெனில் யாரும் மகனைப் பார்த்ததே இல்லை! வீட்டை உடைத்துத் திறக்க வேண்டி இருந்தது.) உதவியோடு வீட்டுப் பூட்டை உடைத்துத் திறந்தால் உள்ளே தாய் படுக்கையில் எலும்புக் கூடாக!

அதைச் சோதனை செய்த மருத்துவர்கள் இறந்து பல மாதங்கள் இருக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள். மகனுக்கு இப்போதாவது தாய், தந்தை அருமை புரிந்ததா எனத் தெரியவில்லை. இவர்களெல்லாம் என்ன மனிதர்கள் என்றே தெரியவில்லை. அந்தக் குடியிருப்பு வாசிகளும் ஒரு வீடு பல மாதங்களாகப் பூட்டிக் கிடக்கிறதே என்னவென்று பார்க்கவில்லை. பிண வாடை அடித்தது கூடவா தெரிந்திருக்காது? வர வர மனித நேயம் கற்றுக் கொடுக்கவே ஒரு பள்ளி ஆரம்பித்தால் பரவாயில்லை போல் இருக்கிறது. அதிலும் பெற்ற தாய், தந்தையரைக் கைவிடாத குழந்தைகள் இருந்தால் அது ஓர் ஆச்சரியமான செய்தியாக இருக்கும் போல் ஆகி விட்டது நிலைமை! ஏன், தந்தை இறந்ததுமே அந்த மகன் நேரில் வந்து தாயை ஒரு நல்ல முதியோர் இல்லத்தில் பலருடைய பாதுகாப்பின் கீழ்ச் சேர்த்திருக்கலாமே என்னும் எண்ணம் வந்ததை மறைக்க முடியவில்லை. குறைந்த பட்சம் கடைசிக் காரியங்களாவது மரியாதையுடன் நடந்திருக்கும்.

அடுத்து இன்னொன்று தமிழ்நாட்டில் என நினைக்கிறேன். இரண்டு மகன், ஒரு மகள் இருக்கும் பெற்றோர் தனியாக வசித்து வந்திருக்கின்றனர். பெற்றோர் பிள்ளைகளை நன்கு படிக்க வைத்துத் திருமணம் செய்து கொடுத்து மூவரும் வசதியாக வாழ்கின்றனர். இப்போது வயதான தந்தைக்குத் திடீர் என   உடல் நலமில்லாமல் போக யாரும் வந்து கவனிக்கவே இல்லை. மனம் வெறுத்த பெற்றோர் இருவரும் விஷம் குடித்து இறந்து விட்டனர்.

அடுத்து இன்னொரு செய்தி உலகப் புகழ் பெற்ற "ரேமண்ட்" குடும்பம் பற்றியது. அந்த "ரேமண்ட்"  தனி இடம் பெற்றுப் புகழ் பெற உழைத்த திரு விஜய்பட் சிங்கானியா 78 வயது நிரம்பிய முதியவர் தன் மகன் தன்னைச் சொந்த வீட்டிலிருந்து வாடகை வீட்டில் கொண்டு விட்டு விட்டதாக வருந்துகிறார்.  இத்தனைக்கும் ரேமண்ட் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை இவர் ஏற்றதுமே அது பல்வேறு சிறப்புக்களுக்கு உள்ளாகி இருந்திருக்கிறது. லண்டனிலிருந்து மும்பை வரை தனியாக விமானம் ஓட்டிச் சாதனை படைத்திருக்கிறார். பத்ம விபூஷண் விருது பெற்றவர்.

தந்தை விஜய்பட்டிடம் இருந்த 1000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளைத் தன் பெயருக்கு மாற்றிக் கொண்ட மகன் தந்தையை அதன் பின்னர் வீட்டிலிருந்து வெளியேற்றி விட்டார். செலவுக்குக் கூடப் பணம் கொடுப்பதில்லையாம்! இத்தனைக்கும் தந்தை பல நகரங்களில் 12 ஆயிரம் கோடி ரூபாய்க்குச் சொத்து சேர்த்து வைத்திருக்கிறார். இப்போது மும்பையின் வீட்டு வசதி வாரிய வீட்டில் வாடகைக்குக் குடி இருந்து கொண்டு தன் மகன் மேல் தன்னைக் கவனிக்காமல் விட்டதற்கு வழக்குப் போட்டிருக்கிறார்.

என்ன ஆயிற்று நம் நாட்டு இளைஞர்கள், நடுத்தர வயதுக்காரர்களுக்கு? உங்களை உங்கள் பெற்றோர் வளர்க்காமல், கவனிக்காமல் விட்டு விட்டார்களா என்ன? நன்றாக வளர்த்துப் படிக்க வைத்து வசதியாக வாழத் தேவையானவற்றைச் செய்து கொடுத்திருக்கிறார்கள் தானே! குறைந்த பட்சம் அந்த நன்றிக்காகவாவது பெற்றோரைக் கவனிக்க வேண்டாமா? மனசாட்சியே இல்லாமல் இப்படியா நடந்து கொள்வது? ஒரு மூன்றாவது மனிதன் கஷ்டப்பட்டால் கூடப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோமே! தன்னைப் பெற்றவர்களை இப்படியா நிராதரவாக விடுவது? கலிகாலம் என்பது சரியாகத் தான் இருக்கிறது!

Wednesday, August 09, 2017

யார், யாரை மன்னிப்பது?

ராமாயணத்தைக் கற்பனை எனச் சொல்பவர்களும் சரி, அதை உண்மை எனச் சொல்பவர்களும் சரி ஒரு விஷயத்தில் ஒத்த கருத்துடனேயே இருக்கின்றனர். அது தான் சீதை தீக்குளித்தது பற்றியது! உண்மையில் ராமாயணத்தை ஒப்புக் கொள்பவர்கள் அதைச் சீதை செய்த பெரிய தியாகமாக ஏற்றுக் கொண்டு விட ஒப்புக் கொள்ளாதவர்கள் தான் அநேகமாக ராமனைக் குற்றம் சொல்கின்றனர். அதிலும் பலரும் ராமன் தான் சீதையைத் தீக்குளிக்கச் சொன்னதாக நினைக்கின்றனர். ராமன் அப்படி எல்லாம் சொல்லவே இல்லை. வால்மீகியை நன்கு படித்தவர்களுக்குப் புரிந்திருக்கும்.


வால்மீகி ஆசிரமத்தில் ராமர் சந்நிதி!

ஆனால் அதை இங்கே சுட்டினாலும் சிலருக்குப் பிடிக்கவில்லை. மூலத்தில் இப்படி இருக்குனு சமஸ்கிருதத்தைக் காட்டுவதில் பெருமை, சந்தோஷம் கொள்கிறேன், அதனால் சொல்கிறேன் என நினைக்கின்றனர்! வால்மீகியை ஒட்டியே எழுதிய கம்பரும் சரி, துளசிதாசரும் சரி ராமனை ஓர் அவதாரமாகக் கடவுளாகக் காட்டி இருக்கின்றனர், வால்மீகி ஒருத்தர் தான் ராமனை மனிதனாகக் காட்டி இருக்கின்றார். ஆகவே சாதாரண மனிதன் செய்யும் செயலைத் தான் ராமன் இங்கே செய்கிறான். அப்படி இல்லாமல் ராமன் சீதையை அப்படியே ஏற்றுக் கொண்டிருந்தால் ராமாயணக் கதையின் போக்கு என்னவாகும் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.

நாமே சொல்வோம். பதினான்கு மாதங்களுக்கும் மேல் இன்னொருவனுடைய வீட்டில் இருந்த சீதையை ராமன் சிறிதும் வெட்கமின்றி ஏற்றுக் கொண்டிருக்கிறானே! இவன் மனைவி மேல் கொண்ட அழியாக் காமத்தால் அல்லவோ (கவனிக்கவும், காதல் அல்ல, காமம்) இப்படி நடந்து கொண்டான் என்போம். ஆக நாம் என்னமோ ராமன் என்ன செய்திருந்தாலும் ஒத்துக்கப் போறதில்லை. குற்றம் தான் சொல்வோம்.  ஆனால் சீதையோ எனில் ராமனைப் புரிந்து கொண்டாள்.

மேலும் சீதைக்கு ராமன் மனது தெரியாமலோ,ராமனுக்கு சீதையின் மனம் தெரியாமலோ, அல்லது அவள் கற்பிற் சிறந்தவள் எனத் தெரியாமலோ இல்லை. எனினும், உலகத்தார் கண் முன்னால் சீதை தன் கற்பை நிரூபிக்கவேண்டும் எனவே ராமன் விரும்பி இருக்கின்றான். சீதையும் தன் கணவனின் மனக் குறிப்பை அறிந்து அதை நிறைவேற்றத் துணிந்திருக்கிறாள். இதையே சீதை நெருப்பிலிருந்து மாசுபடாமல் வெளியே வந்தபோது ராமரும் தன்னிலை விளக்கமாயும் அளிக்கின்றார். எனினும் ஒரு மானுடனாகவே வாழ்ந்த ராமர் இந்த இடத்திலும் மானுடனாகவே, சாதாரண மனிதன் எவ்வாறு தன் மனைவியிடம் கோபத்துடனும், அதிகாரத்துடனும், கடுமையாகவும் நடப்பானோ அவ்வாறே நடந்து, தான் மனிதனாய் இருப்பதில் இருந்து சற்றும் மாறவில்லை என நிரூபித்திருக்கின்றார் என்றும் கொள்ளலாம்.

ஆகவே தான் தன் மேல் உள்ள நம்பிக்கையாலேயே சீதை தன் கணவன் தன்னை இவ்வாறு பேசும்படி நேர்ந்தது என்பதைப் புரிந்து கொண்டாள் என்றே சொல்லவேண்டும். அக்னி கூடத் தீண்ட அஞ்சும் அளவுக்கு சீதை பரிசுத்தமானவளே என்பதை ராமர் புரிந்து வைத்திருந்ததாலேயே சீதை அக்னிப்ரவேசம் செய்யத் தயார் ஆனபோது மறுக்கவில்லை, தடுக்கவில்லை. தன் மனைவி பரிசுத்தமானவளே என்பது தன் மனதுக்கு மட்டும் தெரிந்து தான் மனைவியைச் சேர்த்துக் கொண்டால், உலகிலுள்ளோர் பெண்ணாசையால் பீடிக்கப் பட்ட ராமன் பிறர் வீட்டில் மாதக் கணக்கில் இருந்தவளைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டுவிட்டானே எனப் பேசக் கூடாது என்ற எண்ணம் மட்டும் காரணம் இல்லை. தன் மனைவி தனக்கு வேண்டும், ஆனால் அதே சமயம் அவளைப் பிறர் குற்றம் காணாத வகையிலும் இருத்தல் நல்லது. என்று யோசித்தே ராமர் இந்த முடிவுக்கு வந்தார் எனவும் கூறலாம்.

இதிலே பலருக்கும் சீதையைப் பிரிந்து ராமனும் தனியாகத் தானே இருந்தான்! அவனை ஏன் சீதை தீக்குளிக்கச் சொல்லவில்லை என்பது ஒரு கேள்வி! ஆரம்பத்திலிருந்தே ராமன் சீதையைத் தீக்குளிக்குமாறு சொல்லவே இல்லை. அதோடு சீதை மட்டுமே ராவணன் மாளிகையில் தனியாக இருந்தாள். ஆனால் ராமனோ! தன் தம்பி லக்ஷ்மணனோடு சீதையைத் தேடி அலைந்தான். வழியில்ஜடாயு, வானரங்கள் ஆகியோரைப் பார்க்கிறான். வானரங்கள் கூட இருக்கின்றரே????? அதை மறந்து விட்டீர்களா? தன் தவக்கோலத்தைக் கலைத்துக் கொண்டானா என்ன? இல்லையே! அதே தவ வாழ்க்கைதானே!

ராமனோ, அசோகவனத்தில் சீதையோ, தப்பாய் நடந்ததாய் எங்கானும், யாரானும் ஒரு பேச்சுப் பேசி இருக்காங்களா என்ன? ஆகவே சீதை ராமரை சந்தேகிக்கவேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை. இருவருக்குமே நன்றாகத் தெரியும், உலகத்தார் கண்களுக்கு உண்மை நிரூபிக்கப் பட வேண்டும் என.. சீதை தான் அந்நியர் வீட்டில் இருந்தாளே ஒழிய, ராமன் எந்த நாட்டிலும்  நகருக்குள் எந்த இடத்திலும் நுழையவே இல்லை. தந்தைக்குக் கொடுத்த வாக்குறுதி 14 வருடம் வனவாசம்.அந்தப் பதினான்கு வருடம் முடியும் முன்னர் அவன் எந்த நகருக்குள்ளும் நுழைந்து தன் பிரதிக்ஞையை உடைக்க விரும்பவில்லை. தனியாக இருந்தபோதும், தன் தவங்களைக் கைவிடவில்லை என்று ராமனே, சீதையிடம் சொல்கின்றானே, இந்தச் சந்திப்பின் போது.


ராமன் செய்தது சரினு யாருமே சொன்னதில்லையே! உண்மை தான்! ஏனெனில் ஒரு சாதாரண மனிதன் போல, அற்ப எண்ணம் கொண்டவனாக நடந்து கொண்டான் என்றே சொல்லி இருக்கிறேன், வால்மீகியும் அப்படியே தான் சொல்லி இருக்கின்றார். அதை மறுக்க வேண்டுமென்றால், நான் கம்பராமாயணம் மட்டுமே எழுதி, ராமனை ஒரு அவதார புருஷன் என்று சொல்லி இருக்க வேண்டும் இல்லையா?? அப்படி எங்கே சொன்னேன்??இன்றைய மனிதன் எப்படித் தன் மனைவியிடம் கோபம் வரும்போது நடப்பானோ அப்படித் தான் இதிகாச ராமனும் நடந்து கொண்டான். அதை யாரும், எங்கேயும், எப்போதும் மறுத்துப் பேசியதில்லை. அதனால் ராமன் புகழ் மங்காது. தன் தவறை உணர்ந்து வருந்தும்போதுதான் ஒருவர் புகழ் ஓங்கும். அந்த விதத்தில் சீதையைப் பிரிந்து வருந்தும்போதுதான், ராமன் புகழே ஓங்கியது என்று சொல்லலாமோ???

ஆனால் ஒரு விஷயம் இங்கே முக்கியமாச் சொல்லியே ஆகணும். சீதை தான் கருவுற்றதுமே மீண்டும் காட்டில் சென்று வாழ ஆசைப்படுகிறாள். கர்ப்பிணிகளின் விருப்பத்தை நிறைவேற்றுவது ஒரு கட்டாயமாக இருக்கிறது அல்லவா? ஆகவே தன் விருப்பத்தைத் தன் அருமைக் கணவனிடமும் தெரிவித்துக் கொண்டு தான் இருந்தாள். ஆனால் அவள் காட்டிற்குச் செல்ல அவள் விருப்பம் மட்டும் இல்லாமல் இம்மாதிரியான பழி ஏற்கும் சூழ்நிலை ஒன்றும் உருவாகி விட்டது. ஆகவே ராமன் அவளைக் காட்டுக்கு அனுப்பியே ஆகவேண்டும் என்று முடிவு செய்கிறான். இந்த முடிவு அவனாக ஓர் அரசனாக எடுத்த முடிவு! குடிமக்களின் சந்தேகத்தைப் போக்க வேண்டியது ஓர் அரசனின் கடமை! நல்லாட்சி கொடுக்கிறான் என்னும் நம்பிக்கை மக்கள் மனதில் பதிய வேண்டும். அதற்குத் தான் தன் குடும்பத்தைத் தியாகம் செய்தே தீர வேண்டும்.

ஆகவே மனைவியை மட்டுமின்றி அவள் வயிற்றில் வளர்ந்து வந்த குழந்தைகளையும் சேர்த்தே ராமன் தியாகம் செய்கிறான். ஆனால் அதற்குப் பின்னர் எந்தப் பெண்ணையும் ஏறிட்டுக் கூடப் பார்க்கவில்லை. காட்டில் சீதை ராமனைப் பிரிந்து எவ்வளவு தவித்தாளோ அதற்குச் சற்றும் குறையாமல் அரண்மனை வாழ்வில் ராமனும் தவித்துக் கொண்டிருந்தான்.  அதோடு இல்லாமல் உத்தர காண்டமே பிற்சேர்க்கை எனக் கூறப்படுகிறது. மூலமான வால்மீகி ராமாயணத்தில் இது இல்லை என்றும் பாலகாண்டமும், உத்தரகாண்டமும் பிற்சேர்க்கை எனவும் அவற்றில் தான் ஶ்ரீராமனை ஓர் அவதாரம் எனவும் மஹாவிஷ்ணுவின் அம்சம் என்றும் கூறி உள்ளதாகச் சொல்கின்றனர்.

மூல ராமாயணம் எனக் கருதப்படும் மற்றக் காண்டங்கள் இரண்டிலிருந்து ஆறு வரையிலும் ராமனை ஓர் வீரதீரக் கதாநாயகனாக, எடுத்துக்காட்டு உதாரண புருஷனாகவே சித்திரிக்கிறது. அதோடு உத்தரகாண்டத்தை வால்மீகியே எழுதினார் என வைத்துக் கொண்டாலும் அதில் பட்டாபிஷேஹத்துக்குப் பின்னர் ராமனும், சீதையும் எவ்வளவு அன்புடன் ஒருவருக்கொருவர் இருந்து வந்தார்கள் என்பதையும் அவர்களின் சந்தோஷமான மாலை நேரங்களையும் குறிப்பிடப் பட்டிருக்கிறது.  அவர்கள் திரும்பி வந்து  ஓரிரு ஆண்டுகளுக்குப் பின்னரே இந்த சந்தேகமும் எழுப்பப்படுகிறது.  ஆகவே ராமன் மிகுந்த மனக்கஷ்டத்தோடு தான் இந்த முடிவை எடுத்திருக்கிறான். அதை சீதைக்கு நேரே சொல்லும் மன உறுதி அவனிடம் இல்லை என்பதால் லக்ஷ்மணனை அழைத்துச் சொல்கிறான்.  லக்ஷ்மணன் மறுக்க ஒரு மன்னனாக அவனுக்கு ஆணை இடுகிறான்.


சீதை மண்ணுக்குள் போனதாகச் சொல்லப்படும் இடம். வால்மீகி ஆசிரமம்

இந்தப் படங்கள் ஏற்கெனவே போட்டிருக்கேன்.

சீதை இல்லாத அந்தக் கடைசி வருடங்களில் ராமன் இரவுத் தூக்கம் இல்லாமல், காட்டில் தவ வாழ்க்கை மேற்கொண்ட போது உணவு உண்ட மாதிரிக்கொஞ்சமாக உண்டு மனதில் வேறு பெண்ணைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் வாழ்ந்து வந்தான். இப்போதைய பெண்களுக்கு ராமன் செய்தது தப்பு என்று கூறி விட முடியும்! கூறுகின்றனர்! கூறிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களில் எவருக்கும் ஒரு மன்னனின் பொறுப்புகள், கடமைகள் என்னவென்று புரிந்து கொள்ள முடியாது.  ஒரு நாட்டையே வழி நடத்த வேண்டியவர்கள்,  ஜனங்களுக்கு வழிகாட்டியாகவும்  அரசனாகவும், அவர்களுக்குத் தன் கடமையைச் செய்பவர்கள், சேவை மனப்பான்மையில் ஊறியவர்கள் போன்றோருக்குக் குடும்பம் ஒரு சுமை என்பதை இன்று கூடப் பார்க்கிறோம்.

தங்களுடைய சொந்த சுக, துக்கங்களைத் தியாகம் செய்தே பலரும் தலைமைப்பதவிக்கு வர முடிகிறது. அப்படிப்பட்டவர்களால் தான் மக்கள் தொண்டு ஆற்றவும் முடியும்.  இதற்குப் பல உதாரணங்கள் உண்டு!  ஆகவே ராமனை சீதையோ, சீதையை ராமனோ மன்னிக்க வேண்டியதில்லை. எனினும் ராமன் தன்னைக் காட்டுக்கு அனுப்பியும் ஓர் மன்னனாகத் தன் கடமையைத் தான் செய்திருக்கிறான் என்பதை சீதை புரிந்து கொண்டாள்.

ஆகவே தான் சீதை ராமனை மன்னித்தாள்!

Sunday, August 06, 2017

ஒரு காணொளி (?) காட்சி!

சின்னப் பெண்ணின் நடனம்

லிங்க் வேலை செய்யுது. சோதனை செய்து பார்த்துட்டேன். இந்தப் பெண் ஆடுவது அசர அடித்தது. இந்தப் பெண் ஆடும் பாடல் சிருங்கேரி சங்கராசாரியார் பாரதி தீர்த்தர் எழுதிய பாடல் என அறிந்தேன்.

"கருட கமன தவ சரண கமல" என ஆரம்பிக்கும் பாடல். நண்பர் ஒருவர் ஒரு குழுமத்தில் பகிர்ந்திருந்தார். இதையே முகநூலிலும் பகிர்ந்திருந்தார்களோ என எண்ணுகிறேன். நன்றாக அர்த்தம் புரிந்து ஆடுகிறாள் குழந்தை! மனதுக்கு நிறைவாய் இருக்கிறது.

வலது உள்ளங்கையிலே சுண்டு விரலுக்குக் கீழுள்ள பகுதி, மணிக்கட்டுக்கு அருகே வீங்கிக் கொண்டு வலிக்கிறது. ஏற்கெனவே அங்கே வலி அவ்வப்போது வரும், போகும். கண்டுக்கிறதில்லை. இன்னிக்கு ஜாஸ்தியா இருக்கிறதோடு வீக்கமும் இருக்கு. இன்னிக்கு ஞாயிற்றுக் கிழமை என்பதால் மருத்துவர் இருக்க மாட்டார். நாளை வரை பார்க்கணும்! :)

அதுக்காகக் கடமையைச் செய்யாமல் இருப்போமா என்ன? வந்து கடமையை ஆத்தியாச்சு!

நாளை சந்திர கிரஹணம். இரவு பத்தே முக்காலுக்குப் பிடித்துப் பனிரண்டே முக்காலுக்கு விடுவதாகச் சொல்கிறார்கள். ஒரு சில பஞ்சாங்கங்களில் பனிரண்டு மணிக்கே கிரஹணம் விட்டு விடுவதாகப் போட்டிருக்கு. எப்படி ஆனாலும் நாளை ராத்திரி தூக்கம் இருக்காது! ஹிஹிஹி!

மூத்த மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்டதாம். இன்னிக்குத் தொலைக்காட்சிகளில் அதான் முக்கியச் செய்தி!  திருமணம் செய்து கொண்ட பெண்ணின் மனோநிலையை யோசித்து ரொம்பவே வருத்தமாக இருக்கிறது. பெற்றோர் கொஞ்சம் இல்லை நிறைய அவசரப்பட்டு விட்டார்கள்.

நகை திருடுபவர்கள் விமானத்தில் சென்னைக்கு வந்து நகை பறிப்புத் தொழிலை வெற்றிகரமாகப் பயன் படுத்தி விட்டுத் திரும்ப விமானத்திலேயே டெல்லி செல்கின்றனராம். இங்கே தங்குவதற்கு, மற்றும் மற்றப் பொருட்கள் வாங்குவதற்கு ஆதார், பான் கார்ட் பயனாகிறதாம்! இதை எங்கே போய்ச் சொல்ல!  ஹை டெக் திருடர்கள்! :)

Friday, August 04, 2017

மாறி வரும் கலாசாரங்கள் ஏற்படுத்தும் மன வேதனை!

"மோகமுள்" விமரிசனம்(ஹிஹிஹி அப்படினு நான் தான் சொல்லிக்கணும்) எழுதினப்போ வந்த பார்வையாளர்களை விட இப்போக் "கடுகு" சாரைப் பத்தி எழுதினதுக்கு இன்னும் அதிகமாக வந்திருந்தாங்க. ஆனால் கருத்துச் சொன்னது என்னமோ வழக்கமான நண்பர்களே! ஆனால் நான் பதிவு போட்டவுடன் கடுகு சாருக்கு நிறையக் "கடிதங்கள்" வருவதாகச் சொல்லி அதுக்காக எனக்கு நன்றியும் சொல்லி இருக்கார். எனக்குத் தோன்றியது என்னன்னா
"ஹை, என் எழுத்தையும் படிச்சு ரசிக்கிறவங்க இருக்காங்களே!" என்பது தான். உண்மையிலேயே இது எனக்கு ஓர் ஊக்கத்தைக் கொடுக்கிறது.  எழுதி வைச்சும் சில நாட்களாகப் போடாமல் வைத்திருந்த இந்தப் பதிவைப் போடும் தெம்பைக் கொடுத்திருக்கு. எப்படியோ கடுகு சாரின் பாராட்டும் கிடைத்து விட்டது. உலகக் கோப்பையையே வாங்கினாப்போல் இருக்கு!

தினமுமே  பொதுவா எட்டரையிலிருந்து ஒன்பதுக்குள்ளே படுத்துடுவேன். ஆனால் சென்ற வாரம் சனிக்கிழமை எங்க வீட்டுக் குட்டிக் குஞ்சுலு வரதுக்கு நேரம் ஆயிடுத்து! ஹிஹிஹி, குட்டிப் பேத்தி துர்கா தான். தூங்கிட்டிருந்தா! முழிச்சுண்டு "ங்கா" குடிச்சுட்டு டிரஸ் மாத்திண்டு வர ஒன்பது மணி போல ஆச்சு. அப்போ அவங்களுக்குக் காலம்பர பதினோரு மணி! குழந்தை வரதுக்குள்ளே தொலைக்காட்சியிலே ஏதோ நெடுந்தொடர் ஓடிட்டிருக்கே என்னனு பார்க்கலாம்னு பார்த்தால் பல வருஷங்களாக ஓடிக் கொண்டிருக்கும் "வம்சம்" தொடர் தான். ஆரம்பத்திலோ, நடுவிலோ என்ன ஆச்சுன்னு எல்லாம் தெரியாது! தெரிஞ்சுக்கவும் விருப்பம் இல்லை. ஆனால் நான் சொல்ல விரும்புவது என்னன்னா அன்னிக்கு நான் பார்த்தப்போ நான்கைந்து முரடர்கள் (நடிகர்கள் தான், அடியாட்களாக நடிக்கிறாங்கனு நினைக்கிறேன்.) ஒரு பெண்ணை, அந்தப் பெண் தான் கதாநாயகினு நினைக்கிறேன்.  கதைப்படி பூமிகானு பெயர்!

இந்தத் தொடரில் அந்தப் பெண் சிரிச்சதாகத் தெரியவே இல்லை. தொடர் முழுக்க ஒரே அழுகை தான். ஆரம்பத்தில் பார்த்தது! அதோட இல்லாம இந்தப் பெண்ணின் குழந்தை வேறே அடிக்கடி தானே வீட்டை விட்டுப் போகும்! வரும்! சர்வ சகஜமாக நடக்கும்! அது தான் ஆச்சரியம்னா தொடரில் புதிதாக வரும் பெண்கள் அனைவரும் இந்தப் பெண்ணின் கணவனையே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுவாங்க. ஒவ்வொண்ணா மீண்டு வந்திருப்பானு நினைச்சால் ம்ஹூம்! தொடர் முடியவே இல்லை!  முந்தாநாள் அந்தப் பெண் பூமிகாவா நடிச்ச பெண்ணின் கணவனையும் காணோம். குழந்தையையும் (வழக்கம் போல் காணோம்) அந்தப் பெண்ணை மட்டும் முரடர்கள் தலையில் ஒரு கருப்புத் துணியைப் போட்டுக் கழுத்து வரை கட்டி விட்டுக் கைகளையும் பின்னால் சேர்த்துக் கட்டி இருந்தார்கள்.

இதுவே வன்முறைன்னா அடுத்து அவங்க செய்தது இன்னமும் கோரம், மோசம். அந்தப் பெண்ணை அப்படியே தட்டாமாலை சுத்தறாப்போல் சுத்தி விட்டுட்டு இருந்தாங்க. அதை ரசிச்சுக் கை தட்டிச் சிரிப்பு வேறே. அந்தப் பெண்ணுக்குக் கண்ணும் தெரிய வாய்ப்பில்லை. கைகளைக் கட்டி இருப்பதால் கழுத்து வரை மூடி இருக்கும் துணியையும் அகற்ற முடியாது. இந்த நிலையில் அந்தப் பெண் எங்கேயானும் போய் முட்டிக்கலாம். ஏதேனும் ஆபத்து நேரலாம்.  தட்டாமாலை சுற்றுவதில் தலை சுற்றிக் கீழே விழுந்து  துணி தொண்டையை நெரித்து மூச்சு விட முடியாமல் உயிரும் போகலாம். இம்மாதிரி எல்லாம் கொடுமை செய்வாங்க என்பதே அன்னிக்குத் தொலைக்காட்சி பார்க்கிறச்சே தான் தெரியும். தெரியாதவங்களுக்குச் சொல்லிக் கொடுப்பாங்க போல!

ஏற்கெனவே போலீஸ் அடினு எல்லா சீரியலிலும் காட்டிட்டு இருக்காங்க! போலீஸ் அடி எப்படி இருக்கும் தெரியுமானு கேட்டுட்டு அடிக்கிறதைக் காட்டறாங்க! அதுவே ரொம்பவே  மோசம்!  இன்னொரு தொடரில் கதாநாயகியை நிறை மாத கர்ப்பமாக இருக்கையில் காரின் டிக்கிக்குள் வைத்து அடைக்கிறாள் இன்னொரு பெண்!இவங்க எடுக்கும் தொடர்களில் இவங்களுக்கெல்லாம் வேறே வேலையே இருக்காதா என்றெல்லாம் நினைப்பு வரும். நமக்கெல்லாம் கோபம் வந்தால் அதிக பட்சம் அரை மணி நேரம் இருக்கும்! அப்புறமா நாமே சமாதானம் ஆகி விடுவோம். ஆனால் இந்தத் தொடர்களில் முழு மூச்சாக இதே வேலையா இருக்காங்க!

 இதெல்லாம் பார்த்துத் தான் நம் மக்கள் வன்முறையின் உச்சிக்கே போய் விடறாங்க. ஆனால் இதுக்குக் கெட்ட பெயர் வாங்கிப்பதோ மத்திய அரசு தான். மத்திய அரசின் தூண்டுதலால் தான் மக்கள் வன்முறையில் ஈடுபடுவதாகவும் கொலை, கொள்ளை செய்வதாகவும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.  எங்கே என்ன கெடுதல் நடந்தாலும் அதற்குக் காரணம் என மத்திய அரசைச் சுட்டிக்காட்டுவது கடந்த மூன்று வருடங்களாகப் பழக்கமாகி விட்டது. இதற்கு முன்னர் வன்முறைகளே நடந்தது இல்லையா என்ன?  எல்லாரும் விரும்பிப் பார்க்கும் தொடர்களில் ஆர்வத்தைக் கூட்டுவதற்காகப் பழி வாங்குதல், கொலை செய்தல், தவறான உறவு முறைனு காட்டிடறாங்க. நம் மக்கள் சினிமாவைப் பார்த்தே அந்தக் கதாநாயகன் மாதிரி நடந்துக்க நினைப்பாங்க! இப்போக் கேட்கணுமா?

தொடர்களில் வரும் அல்லது சொல்லிக் கொடுக்கும் அத்தனை முறைகேடான விஷயங்களையும் பரிட்சை செய்து பார்க்கிறாங்க! என்னத்தைச் சொல்றது! இந்தத் தொடர்கள் எல்லாம் எப்போவோ முடிஞ்சு போச்சு! அல்லது முடிஞ்சதாக் காட்டி இருக்கணும்! ஆனாலும் புதுப் புதுப் பாத்திரங்களைக் கொண்டு வந்து அதற்கு ஒரு flash back கொண்டு வந்து தொடரை நீட்டிக்கிறார்கள். எனக்குத் தெரிந்து "தெய்வமகள்" ஐந்து வருடங்களாக வருகிறதோனு நினைக்கிறேன்.  ஒரு தொடர் ஒரு மாதத்துக்கு மேல் வரக் கூடாது! அதிலும் படிப்பினைகள் நிறைந்ததாகக் காட்டணும். வன்முறை இருக்கக் கூடாது! தவறான உறவுமுறையைக் காட்டக் கூடாது. வட மாநிலம் ஒன்றில் இந்தத் தவறான உறவு முறையால் அவங்க சொந்தங்களாலேயே எப்போதோ  கொல்லப்பட்ட இரண்டு பேரையும் மத்திய அரசின் கொள்கையால் கொன்றுவிட்டார்கள் என இப்போது தான் ஒரு குழுமத்தில் எழுதி இருந்ததைப் படித்தேன். அதில் இறந்தவர்கள் "தலித்" என்று வேறே போட்டுட்டாங்க! ஆனால் அந்தச் செய்தியும் பொய்யான செய்தி என அதே குழுமத்தின் இன்னொரு நபர் சுட்டிக்காட்டி இருக்கார். இருந்தாலும் அதை யாரும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.  மத்திய அரசு தான் கொன்று விட்டது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

நொ.கு.ச.சா. :(

"நீட்" தேர்வுக்குத் தமிழ்நாட்டுக்கு விலக்குக் கேட்டுப் போராடறாங்க! ஏன் மாணவர்களின் தரத்தை உயர்த்தப் போராடவில்லைனு புரியலை! ஆனால் தனியார் பள்ளி மாணவர்கள் விலக்குக் கூடாதுனு சொல்றாங்க! இந்தப் படிப்பு விஷயத்தில் அரசியல்வாதிகள் தலையிடாமல் இருக்கலாம். சலுகைகள் மூலம் இடம் பெற்றுவிடலாம். சரிதான். ஆனால் கிட்டத்தட்ட ஆறு வருஷம் படிக்க வேண்டுமே! மருத்துவம் போன்ற படிப்புக்குத் தரமான மாணவர்கள் தேர்வு அவசியம் இல்லையா? விலக்குக் கோரும் மாணவர்கள் மருத்துவப் படிப்பைத் தேர்ந்தெடுத்த பின்னர் அவர்களால் தொடர முடியுமா? அந்த அளவுக்கு அவர்கள் படிப்பின் தரம் இருக்குமா?  எல்லாவற்றுக்கும் சலுகை அல்லது இலவசமே இப்போதைய தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு! மக்கள் இதற்கே பழகி விட்டார்கள்.

கதிராமங்கலம், நெடுவாசல் திட்டங்களுக்காகப் போராடும் மக்களிடம் உங்களுக்குப் பெட்ரோல், எரிவாயு, டீசல் போன்றவை வேண்டாமா என்று கேட்டு ஒரு சர்வே எடுக்கலாம். அவங்க என்னமோ பிஜேபி அரசு வந்து தான் புதுசா எண்ணெய் எடுக்கிறாப்போல் பேசறாங்க. கச்சா எண்ணெயில் நெருப்புப் பற்றாது என்கின்றனர் ஆய்வாளர்கள். மேலும் பல ஆயிரம் அடி கீழே இருந்து எடுக்கப்படும் எண்ணெய்க்கும் நிலத்தடி நீருக்கும் சம்பந்தமும் இல்லைனு பூகோள ஆய்வாளர்கள் பலர் கூறுகின்றனர்.  அதோடு இல்லாமல் இத்தனை வருடங்களாகப் பேசாமல் தான் இருந்தார்கள் எல்லோருமே! திடீர்னு இப்போப் போராட்டம்னு ஆரம்பிச்சிருக்காங்க!  காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி புரிந்தபோது இந்தத் திட்டத்துக்கு ஆதரவு கொடுத்தவங்களே இப்போ எதிராக மாறிப் போய் விட்டார்கள்! அப்போவே ஏன் எதிர்க்கலை?


"பிரதிலிபி"யில்  ஈரோடு கார்த்திக் என்பவர் எழுதிய ஒரு கதை! சுட்டி இங்கே!

ஈரோடு கார்த்திக்

இந்தக் கதையில் நண்பர்  வங்கியில் கொள்ளை அடித்துவிட்டுப் பின்னர் அந்தப் பணத்திலிருந்து குறைந்த பட்சமான தொகையை எப்படித் திருடுவது என்பதை விலாவரியாகச் சொல்லிக் கொடுக்கிறார். இது பிரதிலிபி போன்ற தளத்தில் வருவதே நெருடல்! ஈரோடு கார்த்திக் எழுதியது என்பது இன்னமும் நெருடல்!

முன்னெல்லாம் பள்ளிகளில் நீதி போதனை வகுப்பு எடுப்பார்கள். அவசர உதவி, முதலுதவி செய்தல், தெருக்களைச் சுத்தமாக வைப்பது, பள்ளியைச் சுத்தம் செய்வதில் உதவுதல், தோட்டம் போடுதல், பராமரித்தல் என்றெல்லாம் சொல்லிக் கொடுப்பார்கள். இப்போதோ கதைகள் மற்றும் தொலைக்காட்சிகள் மூலம் எப்படித் திருடுவது, எப்படிக் கொள்ளை அடிப்பது, எப்படி ஏமாற்றுவது என்றே சொல்லிக் கொடுக்கிறார்களே! 

Thursday, August 03, 2017

சில, பல, எண்ணங்களுடன் ஒரு ரசமான அனுபவம்!

நாட்டுக் கத்திரிக்காய் க்கான பட முடிவு

நேற்றைய விலை நிலவரம்

நாட்டுக் கத்திரிக்காய் கிலோ 40 ரூ

நாட்டுத் தக்காளி கிலோ            40 ரூ

முட்டைக்கோஸ்          கிலோ      60 ரூ

இஞ்சி                    100 கிராம்             7 ரூ

கொத்துமல்லிக் கட்டு                     5 ரூ

வெல்லம் பாகு கிலோ                   56 ரூ

சர்க்கரை கிலோ                              43 ரூயிலிருந்து 45 வரை கடைக்குக் கடை மாறுபடுகிறது.

மற்றக் காய்களில் வெண்டைக்காய் கிலோ 40 ரூக்கும் பீர்க்கங்காய் கிலோ 45ரூக்கும் விற்கிறது. இது இன்றைய விலை!

சமையல் எரிவாயு சிலிண்டர் சுமார் 41 ரூ வரை குறைந்திருப்பதாகச் சொல்கிறார்கள். தினசரியிலும் வந்துள்ளது. ஏற்கெனவே முகநூலில் திரு கௌதமனும் பதிந்திருந்தார்.

இப்போ ஆடி மாதம் என்பதால் எங்கெங்கு பார்த்தாலும் தள்ளுபடி சீசன். நம்மைத் தள்ளி விட்டுடும் போல இருக்கு. ஒரு வருஷம் ஆடி மாதத்தின் போதும், தீபாவளியின் போதும் சாரதாஸ் துணிக்கடையில் மக்கள் வரிசையில் நின்று வருவதற்காக இரண்டு மூன்று வரிசைகளில் கம்பி கட்டித் தெருவில் வரும் வரை போட்டிருப்பதைப் பார்த்து அசந்து போனோம். இவ்வளவு கூட்டமா கடைக்குப் போகும் என நினைத்தேன். ஆனால் உண்மையிலேயே அதிலே நின்று மக்கள் வரிசையில் துணிகள் எடுக்கக் கடைக்குச் செல்வதைப் பார்த்தப்போ ஆச்சரியமா இருந்தது. நாட்டில் எல்லோரும் ஏழை என்பதை மனம் ஏற்க மறுத்தது. அவ்வளவு கூட்டம்! தள்ளு முள்ளு இல்லாமல் இருக்கவே இந்த ஏற்பாடு என்றும் அறிந்தேன்.

ஆடி வெள்ளி, மற்றும் வரலக்ஷ்மி நோன்பு நாட்களில் எல்லோரும் வீட்டுக்குப் பெண்களை அழைத்து வெற்றிலை, பாக்கோடு ரவிக்கைத் துணி வைத்துக் கொடுப்பார்கள். சாஸ்திரம், சம்பிரதாயம் இரண்டுமே துணியைத் தான் தரச் சொல்கிறது. ஆனால் அதிலும் சிலர் சுமாரான துணியைக் கொடுப்பதால் பெரும்பாலோர் அதைப் போட்டுக் கொள்வதில்லை. அது இங்கே சுத்தி, அங்கே சுத்திக் கடைசியில் கொடுத்தவருக்கே போய்ச் சேர்ந்து விடும் என நகைச்சுவையாகச் சொல்வதுண்டு. என்னைப் பொறுத்தவரை சுமாரான துணியாக இருந்தாலும் அதை நல்ல ப்ளவுஸ் தைக்கும்போது லைனிங்காக வைக்கப் பயன்படுத்திக் கொண்டு விடுவேன். 80 சென்டி மீட்டர் ரவிக்கைத் துணி வந்தால் மட்டுமே அதை வீட்டு வேலை செய்யும் பெண்ணிடம் கேட்டுக் கொண்டு கொடுப்பேன்.

சென்ற வாரம் ஒரு புது மாதிரியான ரசம் வைத்தேன், அது நன்றாக இருந்தது. அதை முகநூலில் பகிர்ந்திருந்தேன், பலருக்கும் அதன் சமையல் குறிப்பை நான் சொல்லலைனு வருத்தம்! எங்கள் ப்ளாகில் "திங்க"ற கிழமைக்குப் போடலாமோனு நினைச்சேன். அப்புறமா அதை இங்கேயே பகிரலாம்னு நினைச்சேன். ஹிஹிஹி, எழுத வேறே விஷயம் இருக்கு. 2,3 பதிவுகள் எழுதியும் வைச்சிருக்கேன். ட்ராஃப்ட் மோடில் இருக்கு. ஆனால் உடனே வெளியிட யோசனை. அதனால் இன்னிக்கு இந்த மொக்கை!

கீழே உள்ளது வெங்கடேஷ் பட் (சமையல் கலைஞர்) கொடுத்த குறிப்பு. செய்தும் காட்டினார்.

உடுப்பி ரசம்

தே.எண்ணெய்
மங்களூர் மிளகாய் 100 கி
தனியா 75 கி
வெந்தயம் 25 கிராம்
ஜீரகம் 25 கிராம்
கருகப்பிலை ஒரு கைப்பிடி

கடுகு, ஜீரகம், பமி தாளித்துக் கருகப்பிலை சேர்க்கவும். தக்காளியை வெட்டிச் சேர்க்கவும். மஞ்சள் பொடி, உப்பு சேர்க்கவும். புளிக்கரைசலைச் சேர்க்கவும்.வெல்லம் போடவும்.பருப்புத் தண்ணீரில் விளாவவும். பண்ணி வைத்திருக்கும் ரசப்பொடியில் தேவையானதைப் பருப்புத் தண்ணீரில் கலந்து வைக்கவும்.கொதிக்கும் ரசத்தில் கலக்கவும். பெருங்காயம் சேர்க்கவும். கொத்துமல்லி சேர்க்கவும்.

ஆனால் இதிலே ரசத்துக்குத் தாளித்துக் கொண்டு தக்காளியையும் வதக்கிச் சேர்த்துப் புளிக்கரைசல் சேர்ப்பதோ, வெல்லம் போடுவதோ எனக்கு ஒத்துவராத ஒரு விஷயம்! ஹிஹிஹி!  அதோடு மங்களூர் மிளகாய்க்கு நான் எங்கே போக? ஆகவே இதைக் கொஞ்சம் மாற்றி என் வசதிப்படி செய்தேன். ரசம் நன்றாகவே வந்தது. கீழே அதன் குறிப்பு. நான் செய்த முறை.

ஒரு வித்தியாசமான ரசம்:

தேவையான பொருட்கள். புளி ஒரு  நடுத்தர நெல்லிக்காய் அளவு எடுத்துக் கொண்டு ஊற வைத்துப் புளியைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். ஒன்றரைக் கிண்ணம் இருக்கலாம்.

தக்காளி சுமாராக ஒன்று

பச்சை மிளகாய் தேவையானால் சிறிதாக ஒன்று

உப்பு தேவையான அளவு

மஞ்சள் பொடி கால் டீஸ்பூன்

பெருங்காயம், கருகப்பிலை

இரண்டு டீஸ்பூன் துவரம்பருப்பை மிக்சி ஜாரில் போட்டு நன்கு பொடியாக்கிக் கொள்ளவும். தனியாக வைக்கவும்.

வறுத்துப் பொடிக்க

மி.வத்தல் 2

தனியா(கொத்துமல்லி விதை) ஒரு டேபிள் ஸ்பூன்

கால் டீஸ்பூன் மிளகு

ஒரு டீஸ்பூன் ஜீரகம்

ஒரு டீஸ்பூன் வெந்தயம்

இவற்றை வறுத்துப் பொடிக்கவும்

தாளிக்க

நெய் இரண்டு  டீஸ்பூன்

கடுகு, கருகப்பிலை, மி.வத்தல் ஜீரகம்


புளிக்கரைசலை ஓர் ஈயக்கிண்ணம் அல்லது நீங்கள் வழக்கமாக ரசம் வைக்கும் பாத்திரத்தில் ஊற்றி அதில் பொடியாக்கிய துவரம்பருப்புப் பொடியையும் போட்டு அதோடு மஞ்சள் பொடி, பெருங்காயம், கருகப்பிலை, உப்புச் சேர்த்து நன்கு புளி வாசனை போகக் கொதிக்க வைக்கவும்.  நன்கு கொதித்ததும் வறுத்துப் பொடித்த பொடியைப் போட்டு தேவையான அளவுக்கு நீர் விட்டு ரசத்தை விளாவவும். மேலே நுரைத்து வந்ததும் ஓர் இரும்புக்கரண்டி அல்லது தாளிக்கும் பாத்திரத்தில் நெய்யை ஊற்றிக் கடுகு, மி.வத்தல், ஜீரகம் சேர்த்துக் கடைசியில் கருகப்பிலை போட்டு ரசத்தில் கொட்டவும். சூடான சாதத்தோடு சாப்பிடச் சுவையான ரசம் தயார்!

ரசம் படம் கூகிளில் தேடினதில் சரியாக் கிடைக்கலை. நான் வைக்கும்போது படம் எடுத்துத்தான் போடணும். :) ஈயச் செம்பில் வைப்பேன். கூகிளில் தேடினால் பீங்கான், எவர்சில்வர், காப்பர் பாட்டம் பாத்திரங்களே வருது! ரசமெல்லாம் ஈயச் செம்பில் தான் வாசனை! ருசி! 

Tuesday, August 01, 2017

இதுக்குப் போய் அலட்டிக்கலாமா?

இப்போதைய தலைபோகிற விஷயமாக விவாதிக்கப்படுவது எரிவாயு மானியம் ரத்தாகப் போகிறது என்னும் செய்தியும், ரேஷன் முறையை அடியோடு எடுக்கப் போகிறார்கள் என்பதுமே. உண்மையில் ரேஷன் முறையை எடுத்தால் உணவு தானியங்கள் விலை குறைய வாய்ப்பு உண்டு. ஆனால் அதை யாரும் புரிந்து கொள்வதில்லை. அதிலும் இதுவும் ஏதோ மத்திய அரசு செய்யும் ஒரு சதி என்ற அளவிலேயே பேசுகின்றனர். உண்மையில் ரேஷன் கார்டே இல்லைனு சொன்னதாகத் தெரியலை. வ.கோ.கீழ் உள்ளவர்கள், அதற்குக் கொஞ்சம் மேல் உள்ளவர்கள், எனத் தரம் பிரித்து மத்திய அரசுக்குத் தெரிவிப்பதற்காகப் பட்டியல் தயார் ஆவதாகப் படித்தேன். மத்திய அரசு மானிய விலையில் கொடுக்கும் ரேஷன் பொருட்களை இலவசமாகக் கொடுப்பதற்கான பட்டியலும், பாதி விலை அல்லது குறைந்த விலையில் கொடுப்பதற்கான பட்டியலும் தயார் செய்வதாகச் சொல்கிறார்கள். இது மாமூலான ஒன்றே என்றும் சொல்கின்றனர். இதைக் குறித்து இளைய நண்பர் ராஜசங்கர் விபரங்களை முகநூலில் பகிர்ந்திருக்கிறார்.

ரேஷன் அரிசி க்கான பட முடிவு


எப்படின்னா தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படியும் அந்த்யோதயா அன்ன யோஜனாவின்படியும் அவற்றில் இடம் பெற்றிருக்கும் மக்கள் உணவுப் பொருட்களை ரேஷனில் வாங்கிக் கொள்ள முன்னுரிமை பெற்றவர்கள் ஆவார்கள். அவர்களுக்கென வழங்கப்படும் உணவுப் பொருட்களுக்கு முறையே 3ரூ, 2ரூ அல்லது 1 ரூ என்னும் விலையில் மானியமாக மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்துக்கும் வழங்குகிறது.  இதைத் தான் தமிழகம் உள்பட சில மாநிலங்களில் அவரவர் வசதிக்கேற்ப குறிப்பிட்ட ரேஷன் அட்டைகள் வைத்திருப்போருக்கு இலவசமாக அரிசி வழங்கி வருகிறது. இதன் செலவை அந்த அந்த மாநில அரசே ஏற்றுக்கொள்ளும்.

இந்த முன்னுரிமை பெறாத குடும்பங்களுக்கு என உணவு விநியோகம் முக்கியமாக அரிசி விநியோகம் ரூ 7.50 காசு அல்லது 8.30 என்னும் அளவிலே தொடரும். ஆகவே இன்னும் சிலகாலம் முன்னுரிமை பெறாத குடும்பங்களுக்கான அரிசி விநியோகம் தடைப்பட வாய்ப்பில்லை என்றே சொல்கிறார்கள்.  இந்த இரண்டு முறைகளையும் மனதில் கொண்டு ஒவ்வொரு மாநிலத்துக்கும் முன்னுரிமை பெற்ற குறைந்த விலை அரிசி, தானியங்கள் வேண்டுவோர் பட்டியலையும்,  முன்னுரிமை பெறாத ஆனால் ரேஷனில் உணவு தானியங்கள் வாங்குவோருக்குக் கொடுக்க வேண்டியவர்கள் பட்டியலையும் தயாரித்துத் தருமாறு மத்திய அரசு மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறது. ஆகவே தங்களுக்குத் தேவையான உணவு, தானியங்களின் அளவை முன்னுரிமை பெற்றவர்கள், பெறாதவர்கள் என்ற அடிப்படையில் எந்த அளவுக்குத் தேவைப்படும் என்பதற்காகவே இப்போது பட்டியல் தயாராகிறது.  அதோடு இல்லாமல் உணவுத்துறை அமைச்சர் பொது விநியோகத் திட்டம் தொடரும் என்றே அறிவித்துள்ளார்.

மத்திய அரசு இப்படி இரு வேறு நிலைகளில் மானிய விலை உணவு தானியங்களைத் தொடர்ந்து அளித்து வருகிறது. இதைத் தான் மாநில அரசு தன் சுமையாக ஏற்றுக் கொண்டு இலவச அரிசியாக விநியோகம் செய்து வருகிறது. அல்லது இனிமேல் குறைந்த விலையில் முன்னுரிமை பெறாதவர்களுக்கு அரிசியை விற்கலாம்.  இவ்வளவே தான்! இதுக்குப் போய் அலட்டிக்கலாமா? :) எந்த விஷயத்தையும் அதன் முழுமையான பொருளை உள்வாங்கிக் கொள்ளாமல் மேலோட்டமாகப் படித்து விமரிசிப்பதே இப்போது வழக்கமாகி வருகிறது! :(

எரிவாயு மானியம் குறித்து முழு விபரங்களும் கிடைக்கட்டும். பகிரலாம். இப்போதைக்கு ஒண்ணும் தெரியலை! :)